Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் நீர்வரத்து அதிகரிப்பு.. அதிகாரிகள் சொன்ன ஆறுதல் தகவல் என்ன ?
Chembarambakkam Lake Water Level: செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து 1080 கன அடியாக உயர்ந்துள்ளது
சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமழை பெய்யும்போதெல்லாம், செம்பரம்பாக்கம் ஏரி மிக முக்கிய பேசுபொருளாக மாறிவிடும். இதற்கு முக்கிய காரணம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர், செல்லும் பாதை தான் காரணமாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் திருநீர்மலை, குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர் மணப்பாக்கம் வழியாக பயணித்து, ராமாபுரம், நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக பயணித்து அடையாறு முகத்துவாரம் சென்றடைகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு நீர் வெளியேறினால், மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு வரலாறு காணாத மழை பெய்ததால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அவசர அவசரமாக ஏரியில் இருந்து 34,000 கன அடி நீர் பொதுமக்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கை தகவல்களும் தராமல் திறக்கப்பட்டதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக ஏரியிலிருந்து வெளியேறிய நீர், சுற்று வட்டாரத்தில் இருந்த பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பல ஆயிரக்கணக்கான பொது மக்களின் உடைமைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு அதிகாரிகள் முறையான தகவல்களை பொதுமக்களுக்கு கொடுக்காததுதான், பொருளாதார இழப்பிற்கு காரணம் என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன. இதனால் ஆண்டு தோறும் மழைக்காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் மிக முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 13.23 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 1.223 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு காலை 260 கனஅடியாக இருந்த நிலையில் இப்போது நீர்வரத்து ஆனது 1080 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 134 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரியில் கொள்ளளவு 24 அடியில் 14 அடியை கூட இன்னும் தாண்டாததால், தற்போது ஏரி திறக்கப்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல்.
மழை முன்னெச்சரிக்கை என்ன ?
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வடகிழக்கு பருவமழையானது இரவு மற்றும் காலை நேரங்களில்தான் கனமழையானது இருக்கும் எனவும் சென்னையில் , இன்று மாலையிலிருந்தே மழை தொடங்கும் எனவும் சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார். சென்னை முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.