Zomoto CEO: மனைவியுடன் சேர்ந்து சாப்பாடு டெலிவரி செய்த ஜோமொட்டோ சி.இ.ஓ.!
இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜோமொட்டோவின் சி.இ.ஓ. தனது மனைவியுடன் இணைந்து வாடிக்கையாளருக்கு உணவு விநியோகம் செய்துள்ளார்.
இந்தியாவில் இணையளத மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மக்களுக்குத் தேவையான அடிப்படையான பொருட்களை அவர்களது வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கும் வசதி கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளது. அந்த வகையில், கடைகளில் உணவுகளை ஆர்டர் செய்து வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களும் இயங்கி வருகிறது.
மனைவியுடன் உணவு டெலிவரி செய்த ஜோமோட்டோ சி.இ.ஓ.:
இந்தியாவில் முன்னணியில் உள்ள ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமாக இயங்குவது ஜோமோட்டோ. ஜோமோட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக இருப்பவர் தீபிந்தர் கோயல். இவர் தன்னுடைய ஜொமோட்டோ நிறுவன ஊழியர்களின் உணவு டெலிவரியின்போது எதிர்கொள்ளும் சிரமங்களையும், அவஸ்தைகளையும் அறிந்து கொள்ளும் விதமாக வாடிக்கையாளருக்கு தானே நேரில் சென்று ஏற்கனவே ஒரு முறை உணவு விநியோகம் செய்துள்ளார்.
View this post on Instagram
இந்த சூழலில், தற்போது மீண்டும் ஒரு முறை தீபிந்தர் கோயில் நேரில் சென்று வாடிக்கையாளருக்கு உணவு விநியோகம் செய்துள்ளார். இந்த முறை அவர் தனியாக செல்லாமல் அவருடைய மனைவி கிரேஸியா முனோசையும் அழைத்துச் சென்று உணவு விநியோகம் செய்துள்ளார்.
டெலிவரி ஊழியர் - வாடிக்கையாளர் உறவு:
இதன்மூலமாக வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள உறவை நேரில் சென்று அறிந்து கொள்ள முடியும் என்று தீபிந்தர் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹரியானாவில் உள்ள குருகிராமில் உணவு விநியோகம் செய்த ஜோமோட்டோ சி.இ.ஓ. தீபிந்தர் கோயல் ஆகான்ஷா சேதி என்ற வளரும் தொழில் முனைவருக்கு விநியோகம் செய்தார். இதை ஆகான்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபிந்தர் கோயலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீபிந்தர் கோயல் தனது மனைவியுடன் இணைந்து உணவு டெலிவரி செய்துள்ளார்.
தீபிந்தர் கோயல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தின் கீழ் பலரும் பாராட்டி வரும் சூழலில், சிலர் இந்த ஒருமுறை உணவு டெலிவரி மூலம் உணவு டெலிவரி செய்பவர்களின் கஷ்டங்களையும், சிரமங்களையும் எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.