(Source: ECI/ABP News/ABP Majha)
Zoho CEO: யாரையும் ஏமாற்றவில்லை; இவர்தான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் - ஜோஹோ சி.இ.ஓ. ஸ்ரீதர்வேம்பு
ஜோஹோ (zoho) நிறுவனத்தின் சிஇஓவான ஸ்ரீதர் வேம்பு மனைவி பிரமிளா, கணவர் மீது குற்றம் சாட்டியிருந்த நிலையில், இதற்கு ஸ்ரீதர் வேம்பு நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
ஜோஹோ (zoho) நிறுவனத்தின் சிஇஓவான ஸ்ரீதர் வேம்பு தன்னையும், ஆட்டிசக் குறைபாடு உள்ள தனது மகனையும் நிர்க்கதியாக விட்டு சென்றுவிட்டதாக அவரது மனைவி பிரமிளா குற்றம் சாட்டியிருந்த நிலையில், இதற்கு ஸ்ரீதர் வேம்பு நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:
‘’தொடர் தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அவதூறுகள் காரணமாக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். என் குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கையில் இருந்து நேர் எதிராக, துயரங்கள் நிறைந்ததாக இருக்கிறது. ஆட்டிசம் எங்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது. என்னைத் தற்கொலை செய்யும் அளவு மன அழுத்தத்தில் தள்ளியது.
என்னுடைய மகனுக்கு இப்போது 24 வயது. ஆரம்பத்தில் இருந்து அவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளின்போது துயரத்தில் இருந்திருக்கிறேன். அவன் கிராமப்புற இந்தியாவில் வளர்ந்தால், மன நலனுக்கு நல்லது என்று நினைத்தேன். அது எனக்கும் மனைவி பிரமிளாவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தியது.
இது புதியதொரு பிரச்சினையை ஏற்படுத்தியது. பிரமிளா என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கு அமெரிக்காவில் நிலுவையில் உள்ளது.
சந்தேகத்துக்கு இடமின்றி இதை உறுதியாகக் கூறுகிறேன். என்னுடைய நிறுவனத்தின் பங்குகளை இதுவரை யாருக்கும் நான் மாற்றியதில்லை. நான் பிரமிளாவையும் மனகையும் நட்டாற்றில் விட்டுவிட்டேன் என்று கூறுவது முற்றிலும் கட்டுக்கதை. நான் இருப்பதைவிட பணக்கார வாழ்க்கையைத்தான் அவர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு முழுமையாக ஆதரவு அளிக்கிறேன்.
கடந்த 3 ஆண்டுகளாக என்னுடைய அமெரிக்க ஊதியம் பிரமிளாவுக்குத்தான் அளிக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய வீட்டை அவருக்குக் கொடுத்துவிட்டேன். ஜோஹோ ஆதரவின் கீழ்தான் பிரமிளாவின் அறக்கட்டளை செயல்படுகிறது.
அமெரிக்காவில் எங்கள் வீட்டில் வசித்து வரும் சித்தப்பா ராமும் எங்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சினைக்குக் காரணம். நான் என்னுடைய எந்த சொத்தையும் யார் பெயருக்கும் மாற்றவில்லை. மனைவி, மகனை நட்டாற்றில் விட்டுவிடவில்லை. நான் உயிருடன் இருக்கும்வரை அவர்களை கவனித்துக் கொள்வேன்’’.
இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
முன்னதாக ஸ்ரீதர் வேம்புவின் மனைவி பிரமிளா ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ நானும் எனது கணவர் ஸ்ரீதர் வேம்பும் 29 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தோம். கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு கலிபோர்னியாவில் இருந்து தமிழ்நாடு திரும்பிய ஸ்ரீதர், என்னையும், மகனையும் நிர்க்கதியாக விட்டுவிட்டார். என் மகனுக்கு ஆட்டிசம் சென்ற பாதிப்பும், உடல் ரீதியாக சில பாதிப்புகளும் உள்ளது.
இதுதெரிந்தும் ஸ்ரீதர் எங்களை கவனிக்கவில்லை. கலிபோர்னியாவில் என்னுடன் வாழ்ந்த காலத்திலேயே ஜோஹோ நிறுவனத்தில் அவர் பெயரில் இருந்த பங்குகள் மற்றும் அறிவுசார் சொத்துகளை எனக்கு தெரியாமலேயே அவரது சகோதரி, சகோதரியின் கணவர் பெயருக்கு வேம்பு மாற்றி விட்டார்“ என தெரிவித்தார்.
தொடர்ந்து பிரமிளா வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடியபோது, “ கலிபோர்னியா சட்டத்தின்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர், சொத்துகளை விற்க முடியாது. வேம்பு தனது உறவினர்கள் பெயர்களில் சொத்துகளை மாற்றியது சட்ட விரோதம்” என தெரிவித்தனர்.
இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், ஸ்ரீதர் வேம்பு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.