Crime: பயங்கரம்.. கணவன் மற்றும் மாமியாருடன் தகராறு... கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி மருமகள்.. சிக்கியது எப்படி?
கௌஹாத்தியைச் சேர்ந்த பந்தனா கலிதா என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி தனது கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் சங்கரி டேரி ஆகியோரை காணவில்லை என்று நூன்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அசாமில் கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ஆத்திரமடைந்த மருமகள் இருவரையும் கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அசாம் மாநிலம் கௌஹாத்தியைச் சேர்ந்த பந்தனா கலிதா என்பவர் ஜிம் பயிற்சியாளராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி தனது கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் சங்கரி டேரி ஆகியோரை காணவில்லை என்று நூன்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் வழக்கை முடிப்பதில் சிக்கல் நிலவி வந்தது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 21 ஆம் தேதி காணாமல் போன சங்கரியின் அண்ணன் மகள் நிர்மால்யா டே, தனது அத்தையின் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுவதாகவும், இருவரும் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் புகார் அளித்தார். இதையும் போலீசார் விசாரித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சில தினங்கள் முன்பு பந்தனா மற்றும் நிர்மல்யா இருவரும் தனித்தனியாக சிஐடி, அசாம் மற்றும் கவுகாத்தி போலீஸ் கமிஷனரை அணுகி காணாமல் போன வழக்குகளில் விசாரணை முன்னேற்றமில்லை என்று புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் இருவரின் புகார்களும் சம்பந்தமில்லாமல் இருந்ததால் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார் பந்தனாவை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில் கணவர் மற்றும் மாமியார் காணாமல் போன சம்பவத்தில் எந்த வருத்தமும் இல்லாமல் அவர் ஜாலியாக வாழ்ந்து வந்துள்ளார் என தெரிய வந்தது.
மேலும் கணவர் வீட்டில் வாழ்ந்து வரும் அவர் அங்கு அக்டோபரில் பூஜை ஒன்றை மேற்கொண்டபோது, அந்நிகழ்வில் பந்தனாவின் பெற்றோரும் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் வீட்டில் சில கட்டுமான வேலைகள் நடப்பதும், பந்தனா சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருப்பதையும் கொண்டு காணாமல் போனவர்கள் விஷயத்தில் அவருக்கு சம்பந்தம் இருக்கலாம் என நினைத்தனர். இதனைத் தொடர்ந்து வந்தனா கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது மாமியார் மற்றும் கணவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்த நிலையில், அதன்மூலம் மாதம் நல்ல வருமானம் வந்துள்ளது. அதேசமயம் கணவர் அமர்ஜோதி போதைப் பழக்கங்களுக்கு அடிமையானதால் பந்தனாவுடன் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மாமியாரும், கணவருக்கு சப்போர்ட் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பந்தனா இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அவருக்கு டாக்ஸி டிரைவரான டான்டி டெகா மற்றும் காய்கறி விற்பனையாளரான அருப் டேகா இருவரும் உதவியுள்ளனர். தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி மாலை தனது வீட்டில் அருப்பின் உதவியுடன் முதலில் சங்கரியை கொன்றுள்ளனர். அவரை தலையணையால் மூச்சுத் திணறி கொன்றுவிட்டு உடலை அரிவாள் கொண்டு துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். பின்னர் அதனை பாலிதீன் பையில் போட்டு ஒரு போர்வையில் சுற்றி மறுநாள் அதிகாலையில், அவரது உடல் உறுப்புகளை ஷில்லாங்கிற்கும் சிரபுஞ்சிக்கும் இடையே உள்ள காட்டில் வீசியது தெரிய வந்தது.
இதன்பின்னர் ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு கணவர் அமர்ஜோதியை வீட்டில் வைத்து கொன்று அவரது உடலை 5 துண்டுகளாக வெட்டிய பந்தனா, வெட்டப்பட்ட உடலை அஷில்லாங்-டவ்கி சாலைக்கு இடையில் உள்ள ஒரு பகுதியில் காட்டில் வீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாமியார் சங்கரியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், அமர்ஜோதியின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது. மேலும் வந்தனாவுக்கு உதவியதாக டாக்ஸி டிரைவரான டான்டி டெகா மற்றும் காய்கறி விற்பனையாளரான அருப் டேகா இருவரும் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை விவகாரம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.