Amit Shah: மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமென்றால், யோகிக்கு ஓட்டு போடுங்கள் - அமித்ஷா
முகலாயக் காலத்தில் இருந்து 2017ம் ஆண்டுக்கு முந்தைய ஆட்சிக் காலம் வரையில், உத்தர பிரதேச மாநிலம் ராமர் பூமியாகவும், கிருஷ்ணர் அவதாரம் எடுத்த பூமியாகவும், பாபா விஸ்வநாத் பூமியாகவும் இருந்ததில்லை
2024ல் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க வேண்டுமென்றால் 2022ல் உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்தியநாத் பதவியேற்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்தார்.
2024ல் பாஜகவின் பிரதமர் வேட்பாளாராக நரேந்திர மோடி தொடர்வாரா? யோகி ஆதித்தியநாத் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? அடுத்தாண்டு நடைபெறும் உ.பி சட்டமன்றத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? போன்ற பல்வேறு கேள்விகள் தேசியளவில் இருந்து வந்தன. அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்கும் விதமாக அமித் ஷாவின் இன்றைய பேச்சு அமைந்திருந்தது.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள ராணுவ கண்காட்சி மையத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நிகழ்ச்சியில் பாஜகவின் மூத்தத் தலைவரும், இந்தியாவின் உள்துறை அமைச்சருமான அமித் ஷா கலந்து கொண்டார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் வகையில், "மேரா பரிவார் பா.ஜ.கபரிவார்"(எங்கள் குடும்பம் பா.ஜ.க குடும்பம்) என்ற பாஜகவின் அரசியல் முழக்கத்தையும் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "மோடி பிரதமராக இருந்துவருவதால், உத்தர பிரதேச மாநிலம் மேம்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள இரட்டை இன்ஜின் அரசு, தற்போதைய நிலவரத்தை இரட்டைப் பலத்துடன் மேம்படுத்துகிறது. அடுத்தாண்டு உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தான் 2024ல் நடக்கும் மக்களவை தேர்தலின் அடிப்படையாக அமையும். 2024ல் இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்டும் என்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் யோகி ஆதித்தியநாத் முதல்வராக வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும்,மற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு வழியாகும். பாஜக-வினருக்கு, தேர்தல் என்பது கட்சியின் சித்தாந்தத்தை வீடு வீடாக எடுத்துச் செல்லவும் மக்களின் பிரச்சனைகளை அறிந்து, அரசு செய்யும் பணிகளை மக்களிடம் கொண்டு செல்லவே தேர்தல் நடக்கிறது என்றும் தெரிவித்தார்.
முகலாய காலத்தில் இருந்து 2017ம் ஆண்டுக்கு முந்தைய ஆட்சிக் காலம் வரையில், உத்தர பிரதேச மாநிலம் ராமர் பூமியாகவும், கிருஷ்ணர் அவதாரம் எடுத்த பூமியாகவும், பாபா விஸ்வநாத் பூமியாகவும் இருந்ததில்லை. முந்தைய அரசின் கொள்கை, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கும்பல் கொள்ளை அடிப்பதற்கான சுதந்திரத்தை அளித்தது என்று குறிப்பட்ட அவர், ஆட்சி என்பது மக்களுக்கு ஆற்றும் சேவையாக மாற்றியது பாஜக என்றும் தெரிவித்தார்.
முதல்வர் யோகியின் தலைமையின் கீழ், மாஃபியா கும்பல் ஓடி ஒளிந்து மன்னிப்புக் கோரி வருகின்றனர். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ்தான் அயோத்தியில் ராமர் கோயில் நிறுவப்பட்டது என்றும் தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்