"வெட்கக்கேடு.. இந்தியாவின் மகள்களை சித்திரவதை செய்வதில் பின்வாங்காத பா.ஜ.க." - ராகுல்காந்தி கடும் விமர்சனம்
இந்தியாவின் மகள்களை சித்திரவதை செய்வதிலிருந்து பா.ஜ.க. ஒருபோதும் பின்வாங்கியதில்லை என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கதறி அழுத வினேஷ் போகட்:
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வீரர்கள், வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். இச்சூழலில், மது அருந்திய காவல்துறை அதிகாரிகள் சிலர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகட் ஆகியோர் கதறி அழுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜ.க.வை கடுமையாக சாடியுள்ளார்.
மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக கொதித்தெழுந்த ராகுல்காந்தி:
"நாட்டின் வீரர்களிடம் இப்படி நடந்து கொள்வது மிகவும் வெட்கக்கேடானது. பேட்டி பச்சாவ் என சொல்வது எல்லாம் கேலிக்கூத்தான விஷயம். உண்மையில், இந்தியாவின் மகள்களை சித்திரவதை செய்வதிலிருந்து பா.ஜ.க. ஒருபோதும் பின்வாங்கவில்லை" என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ் திட்டம், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பெண் குழந்தை பாலின விகிதம் குறைவதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது.
டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் இடத்தில் கடும் குளிர் வீசி வருவதால் படுக்கையை எடுத்து வந்ததாகவும் அப்போது தங்கள் மீது காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாக மல்யுத்த வீரர்கள் புகார் கூறியுள்ளனர். பெரும்பாலான மல்யுத்த வீரர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் ஒருவர் சுயநினைவின்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன?
இதுகுறித்து காவல்துறை தரப்பு அளித்த விளக்கத்தில், "ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி அனுமதியின்றி மடிந்த படுக்கைகளுடன் போராட்ட இடத்திற்கு வந்தார். போலீசார் தலையிட்டபோது, ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்எல்ஏவும் வேறு இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், குடிபோதையில் உள்ள போலீஸ்காரர்கள் தங்களை தாக்கியதாக மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டுவதைக் கேட்கலாம்.
"குடிபோதையில் உள்ள தர்மேந்திரா என்ற போலீஸ்காரர், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை தாக்கி எங்களுடன் கைகலப்பில் ஈடுபட்டார்" என முன்னாள் மல்யுத்த வீரர் ராஜ்வீர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தம்பி துஷ்யந்த் போகத்தின் தலையை அடித்து உடைத்ததாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கீதா போகட் குற்றம்சாட்டியுள்ளார்.
போராட்டம் நடைபெற்றும் வரும் இடத்தில் மயங்கி விழுந்த வினேஷ் போகத், "இப்படி நடத்தப்படுவதற்கு நாங்கள் குற்றவாளிகள் அல்ல. நீங்கள் எங்களைக் கொல்ல விரும்பினால், எங்களைக் கொல்லுங்கள்" என சொன்னபடி கதறி அழுதார்.