Wrestlers Protest: 'பிரிஜ்பூஷண்சிங்கை கைது செய்யாவிட்டால் பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம்' - மல்யுத்த வீராங்கனைகள் எச்சரிக்கை
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மல்யுத்த வீரர்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்று மாலை கங்கை நதியில் மல்யுத்த வீரர்கள் வாங்கிய பதக்கங்களை வீசப்போவதாக தெரிவித்துள்ளனர்.
"We will throw our medals in river Ganga in Haridwar today at 6pm," say #Wrestlers who are protesting against WFI (Wrestling Federation of India) president Brij Bhushan Sharan Singh over sexual harassment allegations pic.twitter.com/Mj7mDsZYDn
— ANI (@ANI) May 30, 2023
பாலியல் குற்றச்சாட்டு:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 3 மாதங்களுக்கு பின்னர், மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியில் இருந்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும், பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பேரணியாக சென்றனர்.
வீராங்கனைகள் கைது:
அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, வீரர் மற்றும் வீராங்கனைகள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வண்டியில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
இதுகுறித்து டெல்லி காவல்துறை கூறுகையில், "பலமுறை கோரிக்கை விடுத்தும் ஆவேசத்துடன் நேற்று போராட்டக்காரர்கள் சட்டத்தை மீறினர். அதனால்தான் டெல்லியின் ஜந்தர் மந்தரில் அவர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டது. மல்யுத்த வீரர்கள் எதிர்காலத்தில் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கோரி விண்ணப்பித்தால், ஜந்தர் மந்தரைத் தவிர வேறு ஏதேனும் பொருத்தமான இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள்" என குறிப்பிட்டுள்ளது.
கங்கை நதியில் வீசுவோம்:
நாட்டுக்காக ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் காமன்வெல்த் போட்டிகளிலும் விளையாடிய மல்யுத்த வீரர்களை, டெல்லி காவல்துறை தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி ஜந்தர் மந்தரில் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தனர். முதலமைச்சர் ஸ்டாலினும் தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் பதக்கங்களை வீசுவோம் என மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

