'என் கணவரை அலுவலகத்திற்கு கூப்பிடுங்க'- ஹர்ஷ் கோயங்காவின் வைரலான ட்வீட் !
தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெண் ஒருவர் அனுப்பிய மேசேஜை பகிர்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு நாடுகளில் அவ்வப்போது ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுபாடுகளை விதித்து வருகின்றன. அந்தவகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சில அலுவலகங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தொடர்ந்து வருகின்றன. அப்படி வீட்டில் இருந்து வேலை செய்யும் ஒருவரின் மனைவி ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அந்தச் செய்தியை தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி அவர் பதிவிட்டுள்ள பதிவில்,பெண் ஒருவர் ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,"நான் உங்களின் அலுவலகத்தில் வரும் மனோஜ் என்பவரின் மனைவி. என்னுடைய கணவர் இரண்டு தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். அவர் எல்லா விதமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் சரியாக கடைபிடிப்பார். இந்த வெர்க் ஃபர்ம் ஹோம் தொடர்ந்து நடைபெற்றால் எங்களுடைய திருமணம் முறியும் நிலை ஏற்படும்.
Don’t know how to respond to her….😀 pic.twitter.com/SuLFKzbCXy
— Harsh Goenka (@hvgoenka) September 9, 2021
ஏனென்றால், அவர் ஒரு நாளைக்கு 10 முறை காபி குடிக்கிறார். அத்துடன் பல இடங்களில் உட்கார்ந்து அந்த இடத்தை மிகவும் அலங்கோலம் செய்துவிடுகிறார். இவை தவிர அவர் எப்போதும் உணவு கேட்டு என்னை தொந்தரவு செய்து வருகிறார். மேலும் உங்களுடைய அலுவலக மீட்டிங்கின் போது அவர் சில நேரங்களில் அரை தூக்கத்துடன் இருக்கிறார். ஏற்கெனவே எனக்கு வீட்டில் இரண்டு குழந்தைகள் உள்ளன. அவர்களுடன் சேர்த்து இவரையும் பார்த்துக்கொள்ள எனக்கு முடியாது" எனக் கூறியுள்ளார்.
ஆகவே தன்னுடைய கணவரை உடனடியாக அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய அழைக்குமாறு அவர் கூறியுள்ளார். இந்தப் பதிவில் ஹர்ஷ் கோயங்கா, "இதற்கு நான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை" எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். அத்துடன் பலரும் இந்தப் பதிவை பகிர்ந்து வருகின்றனர். மனைவி ஒருவர் தன்னுடைய கணவரை அலுவலகத்திற்கு திரும்பி அழைத்து கொள்ள வேண்டும் என்று கூறிய பதிவு சிலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சிலர் இது தாங்களும் வீட்டில் சந்தித்து வரும் பிரச்னை என்று கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க:Actor Vivek: நடிகர் விவேக் மரணம் குறித்து விசாரணை: மனித உரிமை ஆணையம் உத்தரவு..!