Manipur Issue: அடப்பாவிங்களா..! பாலியல் வன்கொடுமைக்கு காரணமே காவல்துறையா? - மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண் கதறல்
மணிப்பூர் பாலியல் வன்கொடுமையில் காவல்துறையை சேர்ந்த சிலருக்கு, முக்கிய பங்கு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் பாலியல் வன்கொடுமையில் காவல்துறையை சேர்ந்த சிலருக்கு, முக்கிய பங்கு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் பாலியல் வன்கொடுமை:
மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்து தொடர்ந்து கலவரங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுதொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து பேசி வந்தாலும், மத்தியிலும், மணிப்பூரிலும் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக அங்கு நிலமை சீரடைந்து வருவதாக தொடர்ந்து பேசி வந்தது.
இந்நிலையில், மணிப்பூர் கலவரத்தின் உச்சபட்சமாக, 20 வயதுக்கு மேற்பட்ட ஒரு இளம்பெண் மற்றும் 40 வயதை கடந்த ஒரு பெண் என இருவரும் பட்டப்பகலில் சாலையில் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவில், சிலர் அந்த பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அந்த இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு:
சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான புகாரில், “கங்போக்பி மாவட்டத்தில் உள்ள தங்களது கிராமம் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு பிறகு, பாதுகாப்பு கருதி காட்டுக்குள் தப்பி ஓடினோம். தவுபல் காவல்துறையினரால் மீட்கப்பட்ட அவர்கள், காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது. காவல் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் காவல்துறையினர் வாகனத்தை தடுத்து நிறுத்திய கலவரக்காரர்கள், அந்த பெண்களை தூக்கிச் சென்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் அளித்த புகார்:
பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் அளித்த புகாரில் “எங்களை துன்புறுத்திய கும்பலில் பலர் இருந்தாலும், அதில் ஒரு சிலர என்னால் அடையாளம் காண முடியும். அதில் ஒருவர் தனது சகோதரரின் நண்பர் எனவும்” தெரிவித்துள்ளார்.
போலீசாரே காரணம்..!
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளது. அப்போது “தங்களது கிராமத்தை தாக்கிய கும்பலுடன் போலீசார் இருந்தனர். எங்களது வீட்டின் அருகே இருந்து எங்களை பிடித்து சென்ற போலீசார், கிராமத்தில் இருந்து சிறிது தூரம் அழைத்துச் சென்று, அங்கு காத்திருந்த கலவரக்காரர்கள் அடங்கிய கும்பலுடன் எங்களை சாலையிலேயே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். நாங்கள் போலீசாரால் தான் கலவரக்காரர்களிடமே ஒப்படைக்கப்பட்டோம்” என பேசியுள்ளார்.
கலவரத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையினரே, தேசமே அவமானப்படும் வகையிலான ஒரு சம்பவத்திற்கு உறுதுணயாக செயல்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.