Andhra Pradesh: நலத்திட்ட உதவியை பெற்றுக்கொண்டு எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பேன் எனக்கூறிய பெண்: ஷாக்கான அமைச்சர்!
ஆந்திராவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சி அமைச்சருக்கு அதிர்ச்சி தரும் வகையில் பெண் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆந்திராவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சி அமைச்சருக்கு அதிர்ச்சி தரும் வகையில் பெண் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் மக்களின் வாக்குகளை எப்படி கவர்வது என்ற கோணத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. மேலும் புதிய திட்டங்களை அமல்படுத்துவது தொடங்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது வரை ஆளும் அரசுகள் செயலாற்றி வருகின்றன. அதேசமயம் ஆளும் கட்சிகளை வீழ்த்தி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்து பலமாக திட்டம் தீட்டி வருகிறது.
இதற்கிடையில் மக்களவை தேர்தலோடு ஆந்திரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளதால் அங்கு தேர்தல் திருவிழா இப்போதே தொடங்கியுள்ளது. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் பிரதான கட்சிகளாக உள்ளது. தொடர்ந்து இரு கட்சிகளுக்கிடையே வார்த்தைபோர் நீண்டு வரும் நிலையில், மக்கள் வாக்கு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படியான நிலையில், ஆளும்கட்சி அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெண் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள குணபாலத்தில் நடைபெற்ற ஜெகனண்ணா பாதுகாப்பு நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் தர்மன பிரசாத ராவ் பங்கேற்றார். அப்போது பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவரிடம், அடுத்த தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என கேள்வியை அமைச்சர் தர்மன பிரசாத் எழுப்பினார். அந்த பெண்ணோ சற்றும் தயங்காமல் சைக்கிள் சின்னம் என பதில் சொன்னார்.
ஒருவேளை நாம் தான் அப்பெண்ணை குழப்பி விட்டோமோ என நினைத்த அமைச்சர் மீண்டும் அதே கேள்வியை கேட்டார். அந்த பெண்ணும் மறுபடியும் சைக்கிள் என சொன்னார். உடனே சுற்றியிருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், ‘சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்தால் என்ன நடக்கும் என்பது பற்றி சொன்னார்கள். உடனே தன்னுடைய தவறை நினைத்து என்ன செய்வதென்று திகைக்க, அமைச்சர் தர்மன பிரசாத ராவ், ‘வாக்களிக்க முடிவு செய்வது தவறில்லை. அது உங்கள் விருப்பம்’ என்ற ரீதியில் பதிலளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அப்பெண் சொன்ன சைக்கிள் சின்னம் ஆந்திராவில் எதிர்க்கட்சியாக உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் சின்னமாகும். ஆளும் கட்சி அமைச்சரிடம் போய் எதிர்கட்சிக்கு வாக்களிப்பேன் என பெண் ஒருவர் கூறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.