Varanasi : வாரணாசியில் இப்படியா? தெருக்களில் எரியூட்டப்படும் உடல்கள்... ஷாக் சம்பவம்!!
நீர்நிலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாரணாசியின் புகழ்பெற்ற காட் (எரியூட்டப்படும் இடம்) உள்பட பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
வாரணாசியில் எரியூட்டப்படும் இடங்களும் வெள்ளத்திலும் மூழ்கியுள்ளதால், இறந்த உடல்கள் தெருவில் எரியூட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது தொகுதியில் ஏற்பட்டுள்ள இப்பிரச்சனைகளைக் களைய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்
உத்தரப் பிரதேசத்தில் கங்கை மற்றும் வருண ஆற்றின் நீர்நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாரணாசியின் புகழ்பெற்ற காட்கள் (எரியூட்டப்படும் இடங்கள்) உள்பட பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், ஹரிஷ்சந்திரா மற்றும் மணிகர்னிகா காட் (பிணங்களை எரியூட்டும் இடம் பகுதிகளின் தெருக்கள் மற்றும் மொட்டை மாடிகளில் உடல் தகனம் செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களுக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் தயாராகி வருவதால், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பிரதமர் மோடி தனது நாடாளுமன்றத் தொகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, ஏற்கனவே நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாக்வா, சாம்னே காட், மாருதி நகர், காசிபுரம், ரமணா உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதுகுறித்து சாம்னே காட் பகுதியில் வசிக்கும் வீரேந்திர சௌபே கூறுகையில், "வீடுகளுக்குள் தண்ணீர் வரத் தொடங்கியவுடன், நான் எனது குடும்பத்தை எனது கிராமத்திற்கு அனுப்பினேன். அதே நேரத்தில் வீட்டைக் கவனித்துக் கொள்வதற்காக வீட்டிலேயே நான் தங்கி விட்டேன்" என்றார்.
இது தொடர்பாக பாண்டேபூரில் உள்ள ஹுகுல்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சந்திரகாந்த் சிங் கூறுகையில், "ஹுகுல்கஞ்ச் மற்றும் நைபஸ்தி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
அஸ்ஸி காட் முதல் நமோ காட் வரையிலான பகுதி முழுவதுமாக நீரில் மூழ்கியதால், ஹரிஷ்சந்திரா காட் மற்றும் மணிகர்ணிகா காட் ஆகியவற்றில் இறுதிச் சடங்குகளுக்காக வரும் உடல்களை அருகில் உள்ள தெருக்களில் அல்லது மொட்டை மாடிகளில் தகனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இடப்பற்றாக்குறையால், தகனம் செய்ய நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
வாரணாசியில் உள்ள கங்கையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் எச்சரிக்கை நிலையான 70.262 மீட்டரைத் தாண்டி 70.86 மீட்டராக உள்ளது. கங்கையில் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, வருண ஆற்றின் கரையோரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் வரத் தொடங்கியதால், வருண ஆற்றிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயார் நிலையில் இருப்பதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு மற்றும் குடிநீருடன் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாரணாசி எம்பியும், பிரதமருமான நரேந்திர மோடி, மாவட்ட மாஜிஸ்திரேட் கவுஷல் ராஜ் சர்மா மற்றும் கமிஷனர் தீபக் அகர்வால் ஆகியோரை அழைத்து நிலைமை குறித்து கேட்டறிந்தார். வியாழக்கிழமை வெள்ள நிவாரண முகாம்களில் 280 குடும்பங்களைச் சேர்ந்த 1,290 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் 382 பேர் 12 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 132 பேர் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.