Wipro Hire: இளைஞர்களுக்கு நல்ல சேதி - நடப்பாண்டில் 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்க விப்ரோ முடிவு - இலக்கு இதுதான்!
Wipro Hire: நடப்பு நிதியாண்டில் 12 ஆயிரம் புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக, விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
Wipro Hire: வளர்ச்சிக்காக நிறுவனத்தை வலுப்படுத்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை எடுக்க உள்ளதாக, விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 ஆயிரம் பேருக்கு வேலை - விப்ரோ:
ஐடி பெருநிறுவனமான விப்ரோ, 2025 நிதியாண்டில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேரை, புதியதாக வேலைக்கு அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் அறிக்கையில், இந்த நிதியாண்டில் நாங்கள் வழங்கிய அனைத்து ஆஃபர் லெட்டர்களையும் பூர்த்தி செய்வோம், ஆன் கேம்பஸ் மற்றும் ஆஃப் கேம்பஸ் என இரண்டு வகைகளிலும் ஆர்சேர்ப்பு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சிக்காக நிறுவனத்தை வலுப்படுத்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நிதியாண்டுகளிலும் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த நிறுவனம், தற்போது ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. விப்ரோ, Q1FY25க்கான நிகர லாபத்தில் 4.6 சதவீதம் அதிகரித்து ரூ. 3,003.2 கோடி என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தொடரும் ஆட்சேர்ப்பு நடவடிக்கை:
கடந்த ஜுன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், விப்ரோ நிறுவனம் மூவாயிரம் பேரை புதியதாக வேலைக்கு எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 391 ஆக உள்ளது. ”மனித வளத்தை பயன்படுத்தும் எங்களது திறன் உச்சத்தை எட்டியுள்ளது. எனவே எங்களது பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இது சரியான நேரமாக கருதுகிறோம்” என விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெருநிறுவனங்கள் தீவிரம்:
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 11 ஆயிரம் ஃப்ரெஷர்களை புதியதாக பணியில் அமர்த்தியுள்ளது. LTIMindtree நிறுவனம் ஆயிரத்து 400 பேரை பணிக்கு சேர்த்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மொத்தல் 40 ஆயிரம் ஃப்ரெஷர்களை பணியில் சேர்க்கவும், HCLTech 10 ஆயிரம் ஃப்ரெஷர்களையும், இன்ஃபோசிஸ் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஃப்ரெஷர்களையும் பணியில் சேர்க்க இலக்கு திட்டமிட்டுள்ளன.
இளைஞர்கள் மகிழ்ச்சி:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஐடி துறையை சேர்ந்த பெருநிறுவனங்கள் தொடர்ந்து, ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தன. இது இளைஞர்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியாய் அமைந்தது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாகவும் வெடித்துள்ளது. இந்நிலையில் ஐடி துறையை சார்ந்த பெரு நிறுவனங்கள் மீண்டும் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுத்துள்ளன. அதுவும் ஆன் கேம்பஸ் மற்றும் ஆஃப் கேம்பஸ் என இரண்டு வகைகளிலும் ஆட்சேர்ப்புகள் நடைபெற உள்ளன. இதனால், பட்டம் முடித்து வெளியே வரவுள்ள மாணவர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே பட்டம் முடித்து வேலையின்றி தவிக்கும் இளைஞர்களும் பயன் பெற உள்ளனர்.