Lottery : அடிச்சான் பாரு அப்பாய்ட்மெண்ட் ஆர்டர்.. 25 கோடி ரூபாய்.. லாட்டரியை வென்ற ஆட்டோ ஓட்டுநர்..
கேரளாவில் இருந்து மலேசியாவுக்கு சமையல்காரராக பணிபுரிய செல்ல திட்டமிட்டிருந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அன்று ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாயை வென்றுள்ளார்.
கேரளாவில் இருந்து மலேசியாவுக்கு சமையல்காரராக பணிபுரிய செல்ல திட்டமிட்டிருந்த ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அன்று ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாயை வென்றுள்ளார். இதற்கு ஒரு நாள் முன்புதான், 3 லட்சம் கேட்டு வங்கியில் அவர் விடுத்திருந்த விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஸ்ரீவராஹத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப், அந்த லாட்டரி டிக்கெட்டை சனிக்கிழமை அன்றுதான் வாங்கியுள்ளார். TJ 750605 என்ற எண்களை கொண்ட டிக்கெட்டுக்குத்தான் பரிசு விழுந்துள்ளது. ஆனால், அந்த டிக்கெட் தனது முதல் தேர்வு அல்ல என ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார் அனூப். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நான் தேர்ந்தெடுத்த முதல் டிக்கெட்டை விரும்பவில்லை. எனவே, நான் வேறு ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். அது வெற்றியாளராக என்னை மாற்றியுள்ளது. கடன் தொடர்பாக இன்று வங்கி அழைத்தது. இனி எனக்கு அது தேவையில்லை என்றேன். இனி, மலேசியா செல்ல வேண்டிய தேவையும் இல்லை.
கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி, கடந்த காலங்களில் சில நூறுகள் முதல் அதிகபட்சம் 5,000 ரூபாய் வரையிலான தொகைகளை வென்றுள்ளேன். நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் லாட்டரி முடிவுகளை டிவியில் பார்க்கவில்லை. இருப்பினும், எனது தொலைபேசியைச் சரிபார்த்தபோது, நான் வெற்றி பெற்றதைக் கண்டேன்.
என்னால் நம்ப முடியாமல் என் மனைவியிடம் காட்டினேன். அது வெற்றி எண் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். ஆனால், நான் இன்னும் பதற்றமாக இருந்ததால், எனக்கு தெரிந்த லாட்டரி சீட்டு விற்கும் ஒரு பெண்ணை அழைத்து எனது டிக்கெட்டின் படத்தை அனுப்பினேன். அது வெற்றி எண் என்பதை உறுதிப்படுத்தினார். நான் மீண்டும் லாட்டரி சீட்டு வாங்குவேன்" என்றார். லாட்டரிக்கான வரி கழிக்கப்பட்ட பிறகு, அனூப் சுமார் 15 கோடி ரூபாயை வீட்டிற்கு எடுத்துச் செல்வார். பணத்தை என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் தனது குடும்பத்திற்கு ஒரு வீட்டைக் கட்டுவதும், அவர் செலுத்த வேண்டிய கடன்களை அடைப்பதும்தான் தனது முதல் முன்னுரிமை என்றார்.
அதுமட்டுமின்றி, அனூப் தனது உறவினர்களுக்கு உதவ உள்ளதாகவும் சில தொண்டு வேலைகளைச் செய்ய உள்ளதாகவும் கேரளாவில் ஹோட்டல் துறையில் ஏதாவது தொடங்குவேன் என்றும் அவர் கூறினார். லாட்டரியில் வென்றிருப்பது குறித்து பேசிய அனூப்பின் மனைவி, "பல ஆண்டுகளாக அவர் டிக்கெட் வாங்குகிறார். வெற்றியைப் பற்றி அனைவரும் அறிந்ததிலிருந்து எங்களுக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன" என்றார். தற்செயலாக, கடந்த ஆண்டும், 12 கோடி ரூபாய்க்கான ஓணம் பம்பர் லாட்டரியை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரே வென்றிருந்தார். கொச்சி அருகே உள்ள மரடுவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஜெயபாலன் பி.ஆர், பரிசு தொகையை தட்டி சென்றார்.