Rahul Gandhi Ladakh: லடாக்குக்கு பைக் ட்ரீப் சென்ற ராகுல் காந்தி ..நன்றி தெரிவித்து வரும் மத்திய அமைச்சர்கள் ..காரணம் என்ன?
KTM 390 Adventure பேக்கில் லடாக்கிற்கு சென்றுள்ள ராகுல் காந்தி, தான் அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.
நாட்டின் முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு பைக்கில் நேற்று ட்ரீப் சென்றார். ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
லடாக்குக்கு பைக் ட்ரீப் சென்ற ராகுல் காந்தி:
KTM 390 Adventure பேக்கில் லடாக்கிற்கு சென்றுள்ள ராகுல் காந்தி, தான் அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தலைமையில் இமயமலைப் பகுதியில் கட்டப்பட்ட சிறந்த சாலைகளை விளம்பரப்படுத்தி இருப்பதாக கூறி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று ராகுல் காந்தியை பாராட்டினார்.
கடந்த 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவை எக்ஸ் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) சமூக வலைதள பக்கத்தில், கிரண் ரிஜிஜு பகிர்ந்திருந்தார். அதில், "லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரிக்கு செல்லும் வழியில் கற்கள் நிறைந்த சாலையில் செல்ல பல வாகனங்கள் சிரமப்படுவதை காணலாம்"
நன்றி தெரிவித்து வரும் மத்திய அமைச்சர்கள்:
வீடியோவை தொடர்ந்து வெளியிட்ட பதிவில், "முன்னதாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலா எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதையும் ராகுல் காந்தி காட்சிப்படுத்தினார். ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் நமது "தேசியக் கொடி" அமைதியாக ஏற்றப்படலாம் என்பதை ராகுல் காந்தி நினைவூட்டினார்" என கிரண் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் விதமாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்ட பதிவில், "சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, லே மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் நிலைமை எப்படி உள்ளது என்பதை பார்ப்பதற்காகவும், அதை பரப்பவுதற்காகவும் ராகுல் காந்தி அவர்களே பள்ளத்தாக்குக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது சாலைப் பயணத்தின் காட்சிகளைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
லடாக் நிலவரம்:
ராகுல் காந்தி, தற்போது லடாக்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஜம்மு - காஷ்மீரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் லடாக் பகுதி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து, முதல்முறையாக ராகுல் காந்தி, அங்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்த வாரம், ராகுல் காந்தி கார்கிலுக்கு செல்ல உள்ளார்.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலமும் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அரசியலமைப்பு 370ஆவது பிரிவின் கீழ் அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.