1 கோடி ரூ. சன்மானம்! கொல்லப்பட்ட ஜலபதி உயிருக்கு ஏன் இவ்வளவு மதிப்பு? யார் இந்த மாவோயிஸ்ட்?
Moist Leader Chalapti Killed: சத்தீஸ்கரில் 14 மாவோயிஸ்ட்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நிலையில், 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த ஜெயராம் ஜலபதியும் கொல்லப்பட்டுள்ளார்.

Moist Leader Chalapti Killed: ஆந்திரா மற்றும் இந்தியாவின் வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. அரசு சார்பில் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக அடிக்கடி திடீர் தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது.
14 மாவோயிஸ்ட் கொலை:
இந்த நிலையில், ஒடிசா - சத்தீஸ்கர் எல்லையில் நேற்று மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் 14 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் மாவோயிஸ்ட்களுக்கு பெரும் பின்னடைவு அளிக்கும் விதமாக மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவரான ஜெய்ராம் என்ற ஜலபதி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மாவோயிஸ்டகளின் முக்கிய தலைவரான ஜலபதியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. 1கோடி ரூபாய் இவரது உயிருக்கு விலை நிர்ணயம் செய்யும் அளவிற்கு இவர் ஏன் இவ்வளவு முக்கியமானவர்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
ஏன் இவருக்கு மட்டும் 1 கோடி?
இவரது இயற்பெயர் ஜெயராம். இவரை மாவோயிஸ்ட்கள் ஜலபதி என்று அழைப்பார்கள். இவர் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் தன்னுடைய 25 வயதிலே மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்துவிட்டார். ஒரு சாதாரண வீரராக மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்த இவர் தன்னுடைய செயல்பாட்டாலும், தனது சிந்தனையாலும் மாவோயிஸ்ட் அமைப்பினர் மத்தியில் பெரும் செல்வாக்கு உள்ளவராக மாறினார்.
இவரது தலைமைப் பண்பும், இவரது சிந்தனையும் மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக இருந்ததால் இவருக்கு பல முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. மாவோயிஸ்ட் சிந்தனைகளை வேறு பரிணாமத்திற்கு கொண்டு சென்றவராக இவரை மாவோயிஸ்ட் அமைப்பினர் கூறுகின்றனர். இவர் தலைமைப் பண்பு மிக்கவராக மட்டுமின்றி ராணுவ வியூகம் அமைப்பதில் மிகுந்த கைதேர்ந்தவராகவும் திகழ்ந்துள்ளார். இதனால், பல பகுதிகளில் மாவோயிஸ்ட் அமைப்பினர் அரசுக்கு சவால் அளிக்கும் வகையில் மாறியுள்ளனர்.
மாவோயிஸ்ட் தலைவர்:
இவரது சிறப்பான செயல்பாடுகளால் மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினராக மாறினார். இவர் அந்த அமைப்பின் முக்கியமான தலைவரான பசவராஜுடன் நேரடியாக தொடர்பு கொண்டவராக மாறினார். சமீபகாலமாக இவரது முக்கிய பணியாக மாவோயிஸ்ட் சிந்தனைகளை வளரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது இருந்தது.
இவர் பஸ்தார் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் 8 முதல் 10 பாதுகாவலர்களுடன் பதுங்கியிருந்தார். இவருக்கு பாதுகாப்பு வழங்குபவர்களின் ஏகே 47 மற்றும் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகள் இருந்துள்ளது.
அமித்ஷா மகிழ்ச்சி:
ஆந்திராவின் ஸ்ரீகாகுலம், கோரபூட் பகுதிகளில் மாவோயிஸ்ட் ஆதிக்கத்திற்கு இவரது வழிகாட்டுதல் முக்கிய காரணமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே, இவரது உயிருக்கு 1 கோடி சன்மானம் அரசு நிர்ணயித்திருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இவர் காரியாபந்த் - ஒடிசா எல்லைக்கு மாறியுள்ளார். இந்த சூழலில், இவர் உள்பட 14 மாவோயிஸ்ட்களை மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ், கோப்ரா கமாண்டோஸ் ( சத்தீஸ்கர்), சிறப்பு ஆபரேஷன் குழு ( ஒடிசா) இணைந்து என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். ஒடிசா எல்லையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்தீஸ்கரின் குலாரிகத் காட்டிற்குள் இந்த என்கவுன்டர் நடந்துள்ளது. இதை மிகப்பெரிய வெற்றியாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.





















