உயிரை பறிக்கும் இந்திய இருமல் மருந்து? - எச்சரிக்கும் WHO - விளக்கம் அளித்த பஞ்சாப் நிறுவனம்
பஞ்சாப் மாநிலத்தின் க்யூபி ஃபார்மா கெம் லிமிடட் (QP Pharma Chem Limited) தயாரிக்கும் இருமல் மருந்தை அருந்திய மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஸீயா நாடுகளில் வசிப்போருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பு மருத்துவ எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் க்யூபி ஃபார்மா கெம் லிமிடட் (QP Pharma Chem Limited) தயாரிக்கும் இருமல் மருந்தை அருந்திய மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஸீயா நாடுகளில் வசிப்போருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பு மருத்துவ எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இந் நிலையில் இது திட்டமிட்டே இந்தியாவை அவமதிக்கும் செயல் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Guaifenesin Syrup TG என்ற அந்த சிரப்பை ட்ரில்லியன் ஃபார்மா நிறுவனம் மார்க்கெட் செய்கிறது. இதில் டை எத்திலின் க்ளைக்கால் இருப்பதாகவும் எத்திலீன் க்ளைக்கால் அதிகமாக இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து க்யூபி ஃபார்மா கெம் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுதிர் பதக் கூறுகையில், "எங்களது மருந்து முழுக்க முழுக்க அனைத்து வரம்புகளையும் பின்பற்றி தயாரிக்கப்பட்டுள்ளது. இதை வேண்டுமென்றே யாரோ போலியாக தயாரித்து விற்றிருக்க வேண்டும். இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் செய்திருக்கலாம். நாங்கள் கம்போடியாவுக்கு மட்டுமே இந்த மருந்தை ஏற்றுமதி செய்கிறோம். ஆனால் யாரோ இதை போலியாக தயாரித்து மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியாவில் விற்றிருக்கிறார்கள். கம்போடியாவுக்கு அனுப்பப்பட்ட 18,336 பாட்டில்களின் மாதிரியை உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை பரிசோதனை செய்கிறது. விரைவில் உண்மை தெரிய வரும்" என்றார்.
காம்பியா சம்பவம்:
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் மரணம் அடைந்தனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை எடுத்து கொண்டதால் தான் அவர்கள் மரணம் அடைந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டது.
காம்பியா 66 குழந்தைகள் உயிரிழந்ததற்கு மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த நான்கு மருந்துகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது பின்னர் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ட்விட்டர் பக்கத்தில், "காம்பியாவில் அடையாளம் காணப்பட்ட நான்கு அசுத்தமான மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு இன்று மருத்துவ தயாரிப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடுமையான சிறுநீரக பிரச்னை ஏற்படுவதற்கும் 66 குழந்தைகள் உயரிழந்ததரற்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம். இந்த இளம் உயிர்களின் இழப்பு அவர்களது குடும்பங்களுக்கு மனவேதனைக்கு அப்பாற்பட்ட வலியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நான்கு மருந்துகள் அதாவது இருமல் மற்றும் சளி மருந்துகள் இந்தியாவில் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அந்நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் உலக சுகாதார அமைப்பு மேலும் விசாரணை நடத்தி வருகிறது" என்று தெரிவித்திருந்தது.
அதேபோல் இந்தோனேசியாவில் இருமல் மருந்தால் குழந்தைகள் இருந்த சம்பவத்திலும் இந்திய மருந்து நிறுவனங்களின் இருமல் மருந்துகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இந்திய மருந்து நிறுவனங்களின் இருமல் மருந்துகளை அருந்தி உயிரிழந்ததாகவும் புகார் எழுந்தது.
இப்படியாக அடுத்தடுத்து இந்திய மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் இருமல் மருந்துகள் உயிர் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேற அந்த வரிசையில் இந்த சர்ச்சை புதிதாக இணைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்னும் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.