Hurun list : இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் யார் யார்?ஹுரூன் பட்டியலில் முதன்முறையாக முதலிடத்தை இழந்த அம்பானி!
1,103 தனிநபர்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர், இது முந்தைய ஆண்டை விட 96 அதிகம். கடந்த ஐந்து ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 65% அதிகரித்துள்ளது.
அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி, ‘IIFL Wealth Hurun'இன் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில், 10.9 லட்சம் கோடி ரூபாய் (கிட்டத்தட்ட $140 பில்லியன்) சொத்துக்களுடன் முதல் முறையாக இந்தியாவின் பணக்காரர் என்னும் பெயர் பெற்றுள்ளார்.
ஹுரூன் பணக்காரர்களின் பட்டியல்
ஐஐஎஃப்எல் வெல்த் ஹுரூன் பணக்காரர்களின் பட்டியல், பொது மற்றும் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தியர்களின் செல்வத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த Hurun பணக்காரர்கள் பட்டியல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி 2022 அன்று உள்ள கணக்கீடுகளை எடுத்துக்கொள்கிறது. அறிக்கையின்படி, 1,103 தனிநபர்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர், இது முந்தைய ஆண்டை விட 96 அதிகம். கடந்த ஐந்து ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 65% அதிகரித்துள்ளது. ஹுருன் பட்டியல்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து முதல்முறையாக, பணக்கார பட்டியலாளர்களின் மொத்த சொத்து ரூ.100 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது, இது சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும். இந்த பட்டியலில் மருந்துத் துறை மிகப்பெரிய பங்களிப்பாளராக இருந்து வருகிறது. ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் 102 தொழில்முனைவோரை இந்த பட்டியலில் இணைத்துள்ளது.
அதானி
இதில் அதானியின் சொத்து மட்டும் ஒரு வருடத்தில் 116% வளர்ச்சியடைந்து இருமடங்காக உயர்ந்துள்ளது. அம்பானியின் நிகர மதிப்பு 11% அதிகரித்து ரூ.7.9 லட்சம் கோடியாக (சுமார் $99 பில்லியன்) உயர்ந்துள்ளது. 2021ம் ஆண்டு வெளியான பட்டியலில் அதானியை விட அம்பானி ரூ.2 லட்சம் கோடிக்கு முன்னிலையில் இருந்தார். ஆனால் அதானியின் அசுர வளர்ச்சியால், 2022-ல் ரூ. 3 லட்சம் கோடி அளவுக்கு அம்பானியை விட முன்னிலை வகிக்கிறார். 2012 இல் ஹுரூனின் இந்திய பணக்காரர்கள் பட்டியல் தொடங்கப்பட்டதில் இருந்து அம்பானிதான் முதலிடம் வகித்து வந்தார். அதன்பிறகு அதானியின் சொத்து ரூ. 5.9 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. வங்கியாளர்களின் கூற்றுப்படி, அதானியின் பங்குகளில் கணிசமான பகுதி புதிய கையகப்படுத்துதல்களுக்கு நிதி திரட்ட பயன்படுத்தப்படுகிறது.
வினோத் அதானி
அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, துபாயில் இருந்து வர்த்தகம் செய்யும் வணிகங்களை நிர்வகித்து வருகிறார். மேலும் அவர் கடந்த ஆண்டு 49 வது இடத்தில் இருந்தார், ஆனால் தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒரு வருடத்தில் மட்டும் அவரது சொத்துக்கள் 28% அதிகரித்து ரூ.1.7 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில், அவரது சொத்து 850% அதிகரித்து, அவரை பணக்கார NRI ஆக்கியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில் ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸில் அதானி முதல் பணக்கார இந்தியராக அம்பானியை பின்னுக்குத் தள்ளினார். அந்த நேரத்தில், அவர் $88.5 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டிருந்தார், அம்பானியின் அப்போதைய $87.9 பில்லியன் நிகர மதிப்பை முறியடித்து ஆசியாவின் பெரிய பணக்காரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கடந்த வாரம், ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, எலன் மஸ்க்கை தொடர்ந்து உலகின் இரண்டாவது பணக்காரராக மாறியுள்ளார்.
பணக்கார பெண்மணி
அழகு மற்றும் ஆரோக்கிய ஈ-காமர்ஸ் தளமான Nykaa பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து, ஃபால்குனி நாயர், பயோடெக் தலைவரான கிரண் மஜும்தார்-ஷாவை பின்னுக்குத் தள்ளி, சுயமாக உருவாக்கிய இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய பணக்கார பெண்மணி என்ற பெருமையையும் ஃபால்குனி பெற்றுள்ளார். இந்த ஆண்டில் மற்றொரு பெரிய லாபம் ஈட்டியவர் தடுப்பூசி மன்னன் சைரஸ் பூனவல்லா, அவர் ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் சொத்துக்களுடன் மூன்றாவது பணக்கார இந்தியராக மாறியுள்ளார். கடந்த ஆண்டு, பூனாவல்லா பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
முதல்முறை தொழில்முனைவோர்கள்
ஹுருன் இந்தியாவின் MD & தலைமை ஆராய்ச்சியாளர் அனஸ் ரஹ்மான் ஜுனைட் இதுகுறித்து பேசுகையில், "இந்த பட்டியலில் 67% சுயமாக உருவாகியுள்ளனர், இந்த சதவிகிதம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 54% ஆக இருந்தது. மேலும், இந்த ஆண்டு 79% புதிய முகங்கள் சுயமாக உருவாகியுள்ளனர். முதல் தலைமுறை தொழில்முனைவோர் மற்றும் தொழில்முறை மேலாளர்களின் செல்வத்தை உருவாக்கும் இயந்திரம் முழு வேகத்தில் செயல்படுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $5-ட்ரில்லியன் மதிப்பை எட்டுவதற்கு இது ஒரு முக்கிய உந்துதலாக உள்ளது", என்று கூறினார். இந்த ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் சில ஆச்சரியங்கள் உள்ளன. முதல் முறையாக 19 வயதே ஆகும் ஒரு இளம்பெண் கைவல்யா வோஹ்ரா, Zepto என்னும் நிறுவனத்தை நிறுவி இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 'இயற்பியல் வாலா' என்று பிரபலமாக அறியப்படும் அலக் பாண்டே மற்றும் அவரது இணை நிறுவனர் பிரதீக் பூப் ஆகியோர் பட்டியலில் புதிதாக அறிமுகமாகியுள்ளனர். அவர்களின் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'பிசிக்ஸ் வாலா' நல்ல லாபம் தரும் தொழிலாக மாறிய பிறகு இருவரும் ரூ.4,000 கோடி சொத்துக்களுடன் 300வது இடத்தில் உள்ளனர்.