ஒரு நாடு ஒரே தேர்தல் - சாத்தியமா... சவால்கள் என்ன?
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளை உருவாக்கியதில் தேசிய அரசியல் களம் முக்கிய பங்கு வகித்தது என்பதே நிதர்சனமான உண்மை.
திமுக அரசைக் கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் அஇஅதிமுக மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. சேலத்தில் கலந்து கொண்டு பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, 'ஒரு நாடு ஒரே தேர்தல்' மூலம் 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.
'ஒரு நாடு ஒரே தேர்தல்' என்பதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவாகவும், எதிராகவும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. ஒரு நாடு ஒரே தேர்தல் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒரே சமயத்தில் வாக்காளர்கள் (இரண்டு வாக்குகள்) மூலம் மத்திய/மாநில அரசுகளை தேர்வு செய்ய வேண்டும். நமது நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நடைமுறை ஒன்றும் புதிதல்ல. 1952,1957, 1962,1967 ஆகிய ஆண்டுகளில் மத்திய/மாநில அரசுகளுக்கான தேர்தல் ஒரே சமயத்தில் நடைபெற்றன. 1968ல் சில மாநில சட்டப்பேரவை முன்கூட்டியே கலைக்கப்பட்டதன் விளைவாக இந்த தேர்தல் சுழற்சி சீர்குலைந்தது.
'ஒரு நாடு ஒரு தேர்தல்' தேவைக்கான காரணங்கள்:
நாட்டின் பொருளாதார சூழல், பெருமளவிலான பணம், மக்களின் கடுமையான உழைப்பு ஆகியவை அடிப்படையில் ஒரு நாடு ஒரு தேர்தல் முன்னிலைப்படுத்துகிறது.
உதாரணமாக, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் முடியும் வரை (கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள்), ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்த விதிமுறைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தந்த மாநிலங்களுக்கு மட்டும் அமலில் இருக்கும். இதன், காரணமாக பயனளிக்கும் எண்ணற்ற செயல் திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, 18வது நாடாளுமன்றத் தேர்தலுக்கு (2024) முன்பாக, கிட்டத்தட்ட 16 மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றன. சாரிசாரியாக ஓவ்வொரு ஆறு மாதத்துக்கும் குறைந்தது நான்கு மாநிலங்களில் வளர்ச்சிப் பனித் திட்டங்கள் செயல்படுத்தாத சூழல் உருவாகும். இந்த போக்கை காணும் போது, ஓவ்வொரு ஆண்டும் நாட்டின் ஏதேனும் ஒரு பிராந்தியத்தில் வளர்ச்சிப் பணிகள் முடக்கவேண்டிய வாய்ப்பு உள்ளது.
எதிர்ப்புக்கான காரணங்கள்:
ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடந்தால் மாநிலக் கட்சிகளின் இருத்தல்களே கேள்விக்குறியாகி விடும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
உதாரணமாக, 1999, 2004, 2009, 2014 ஆகிய நான்கு நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை IDFC Institute ஆய்வு நிறுவனம் ஆராய்ந்தது. இதில், மத்திய/ மாநில அரசுகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடக்கும் போது 77% வாக்காளர்கள் ஒரே கட்சிக்கு வாக்களுக்கும் போக்கு காணப்படுவதாக அதன் ஆசரியர் பிரவின் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். அதாவது, 77% சட்டப்பேரவை தொகுதிகளில் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றியடையும் கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது. இதில், மேலும் ஒரு குறிப்பிடப்படும் விசயமாக அடுத்தடுத்த தேர்தல்களில் ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. உதாரணமாக, 2004ல் 77% ஆக இருந்த வெற்றி வாய்ப்பு,2016ல் 86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
Centre for the Study of Developing Societies அமைப்பின் இயக்குனர் சஞ்சய் குமார் மேற்கொண்ட மற்றொரு ஆய்விலும் இந்த போக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1989 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், 38 முறை சட்டப்பேரவை/ நாடாளுமன்றத்துக்கு ஒரே சமயத்தில் நடைபெற்ற தேர்தகளில், 7 தேர்தல்களில் மட்டும் சட்டப்பேரவைக்கு ஒரு விதமாகவும், மக்களவைத் தொகுதிக்கு வேறு விதமாகவும் வாக்களித்துள்ளனர். இதில், 24 தேர்தல்களில் மக்களவைத் தொகுதிக்கும், சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரே கட்சிக்கு பெருவாரியான வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். எனவே, ஒரே சமயத்தில் தேர்தல் என்ற முறை நடைமுறை படுத்தப்பட்டால் நாளடைவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் வலுப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு வாக்களார்கள் போக்கு:
சட்டப்பேரவைத் தேர்தல் | மக்களவைத் தேர்தல் |
1977 - அதிமுக (130) காங்கிரஸ் கூட்டணி |
1977 - அதிமுக ,காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி |
1980 - அதிமுக (129) | திமுக , காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி |
1984 - அதிமுக மற்றும் காங்கிரஸ் வெற்றி |
அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி |
1989 - திமுக வெற்றி | காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அமோக வெற்றி |
1991 - அதிமுக மற்றும் காங்கிரஸ் வெற்றி | அதிமுக மற்றும் காங்கிரஸ் மகத்தான வெற்றி |
1996 - திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் அமோக வெற்றி | திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் அமோக வெற்றி |
1998 - திமுக பின்னடைவு | |
1999 - அதிமுக பின்னடைவு | |
2001 - அதிமுக வெற்றி | |
2004 - திமுக காங்கிரஸ் அமோக வெற்றி | |
2006 - திமுக வெற்றி | |
2009 - திமுக பின்னடைவு | |
2011 - அதிமுக வெற்றி | |
2014 - அதிமுக வெற்றி | |
2016 - அதிமுக வெற்றி | |
2019 - திமுக கூட்டணி வெற்றி | |
2021 - திமுக வெற்றி |
தமிழ்நாட்டில் 1977க்குப் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், ஏழு முறை ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில், ஒன்றில் மட்டுமே (1980) சட்டப்பேரவைக்கு ஒரு விதமாகவும், மக்களவைத் தொகுதிக்கு வேறு விதமாகவும் வாக்களித்துள்ளனர். இதர அனைத்து தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணியே தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க மாநிலத்தின் தலைவர்களின் தேவை என்பது ஒருபுறமிருக்க, மாநிலத்தில் தலைவர்களை தேசியக் கண்ணோட்டத்தில் தான் தேர்ந்த்தெடுக்கப்படுகின்றனர் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.1977 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பால் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வரானார். 91 நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் களம் ஜெயலலிதாவை முதல்வராக்கியது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளை உருவாக்கியதில் தேசிய அரசியல் களம் முக்கிய பங்கு வகித்தது என்பதே நிதர்சனமான உண்மை.
நடைமுறைகளில் உள்ள சிக்கல்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, மக்களவையும், ஓவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையும்,அது கூட்டப்பட்ட முதல் நாளில் இருந்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து இருக்கும். ஐந்து ஆண்டுகள் என்பதற்கு உத்தரவாதம் மில்லை. இருந்தாலும், போதியப் பெருன்மான்மை இல்லாவிட்டால் அது முன்னதாகவே கலைக்கப்படாலம். அதே போன்று, அவசர காலகட்டத்தில் (குடியரசுத் தலைவர் ஆட்சி, ஆளுநர் ஆட்சி) இந்த இரண்டு அவைகளையும் நீட்டிக்க முடியும்.
ஆனால், ஒரு நாடு ஒரு தேர்தல் சீர்திருத்தத்துக்குப் பின்பு, மக்களவையிலும், மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையிலும் ஒரு கட்சி பெரும்பான்மையை இழக்க நேர்ந்தால், அடுத்த ஐந்தாண்டு தேர்தல் சுழற்சி வரும் வரை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தும் சூழல் உருவாகும். இது, இந்திய ஜனநாயகத்தை படுதோல்வி அடைய செய்யும்.