Bihar Election Result: பீகாரில் இண்டியா கூட்டணியை மொத்தமாக முடித்த ஓவைசி, பிரசாந்த் கிஷோர்..! சிதறிய ஓட்டுக்கள்
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இண்டியா கூட்டணியை வீழ்த்தும் வகையில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

பீகார் தேர்தல் முன்னிலை
இந்திய மக்களால் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பீகாரில் மொத்தமாக உள்ள 243 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமாக 66.91 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) - மகாகத்பந்தனுக்கும் (மகா கூட்டணி) இடையே நேரடி போட்டியாக உள்ளது.
அதே நேரம் ஜன்சுராஜ் கட்சியை சேர்ந்த பிரசாந்த் கிஷோர், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் களத்தில் இறங்கியது. தேர்தல் முடிவடைந்த நிலையில் கருத்து கணிப்புகள் வெளியானது.
இண்டியா கூட்டணிக்கு ஷாக்
அனைத்து கருத்து கணிப்புகளிலும் பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும் என தெரிவித்திருந்தது. இதனை மெய்பிக்கும் வகையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக கூட்டணி முன்னனியில் இருந்து வருகிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 155 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இண்டியா கூட்டணி 80 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. ஜன்சுராஜ் கட்சி 2 இடங்களிலும், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. எனவே இந்த தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு சாதமாக இருந்த வாக்குகளாக கருதப்பட்ட சிறுபான்மையினரின் வாக்குகள் பிரிந்துள்ளதாகவே கூறப்படுகிறது.
வாக்குகள் சிதற காரணம் என்ன.?
கடந்த சட்டமன்ற தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த முறை இண்டியா கூட்டணியோடு இணைந்து போட்டியிட விரும்பியது. ஆனால் ஓவைசியை இண்டியா கூட்டணியில் இணைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக தனி அணியாக போட்டியிடப்போவதாக அறிவிப்பை வெளியிட்ட அசாதுதீன் ஓவைசி 25 தொகுதிகளில் களம் இறங்கியுள்ளது.
தற்போது வரை 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருக்கும் நிலையில், பல தொகுதிகளில் சிறுபான்மையினரின் வாக்குகளை கணிசமாக பிரித்துள்ளதாகவே கூறப்படுகிறது. இதுவே இண்டியா கூட்டணி 25 தொகுதிகளில் பின்னடைவே சந்திப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதே போல பிரசாந்த் கிஷோரும் தனி அணியாக போட்டியிட்டுள்ளார். அவரும் இந்தியா கூட்டணிக்கு செல்லக்கூடிய வாக்குகளை பிரித்ததாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.






















