நாடாளுமன்ற பாதுகாப்பு குறைப்பாடு... உள்துறை அமைச்சர் பதில் அளிப்பதில் என்ன பிரச்சனை?- திருச்சி சிவா பேட்டி
வெள்ள நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் குளிர்க்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அண்மையில் நாடாளுமன்றத்தில் இரண்டு பேர் அத்துமீறி நுழைந்து புகைகளை கக்கும் கருவிகளை வீசினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாகத்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில், இந்த சம்பவம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு செவி சாய்க்காததால் எதிர்க்கட்சியினர் அமலியில் ஈடுபட்டனர். இதனால் மொத்தம் 141 எம்.பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, இது குறித்து கருத்து தெரிவித்தார். அதாவது “ இந்த பிரச்சனையை அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றனர். இந்த விவகாரம் விசாரணை வளையத்திற்குள் உள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் திமுக எம்.பி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற பாதுகாப்பு குறைப்பாடு குறித்து உள்துறை அமைச்சர் பதில் அளிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது. குஜராத்துக்கு உதவி செய்த மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்குவதில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. நாடாளுமறத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. டிசம்பர் 13-ல் நடந்த நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து பதில் அளிக்க வேண்டிய பொருப்பு அரசுக்கு உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது வெளியில் அறிக்கை தருவது மரபு அல்ல.
அவையில் குழப்பம் உள்ள போது 5 மசோதாக்களை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பேச காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாய்ப்பு தரவில்லை. எதிர்கட்சி எம்.பிக்கள் 141 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அறிக்கை அளிப்பதில் என்ன சிக்கல் உள்ளது?. எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு ஒலிப்பெருக்கி தருவது இல்லை. அவர்களை கேமராவில் காட்டுவதும் இல்லை”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க