வெள்ளத்திற்கு மத்தியில் சிக்கி கொண்ட கார்... உள்ளே உயிருக்கு போராடும் பெண்... துணிச்சலாக செயல்பட்ட உள்ளூர்வாசிகள்..!
மன உறுதியுடன் துணிச்சலாக செயல்பட்ட உள்ளூர்வாசிகள் அந்த பெண்ணை மீட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலம் பஞ்சகுலா நகரில் அசாதாரண சூழலுக்கு மத்தியில் சிக்கி கொண்ட பெண்ணை உள்ளூர் மக்கள் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ககர் நதியின் நீர் அளவு திடீரென அதிகரித்தது. இதனால், பஞ்சகுலா நகரின் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
ஹரியானாவில் பலத்த மழை:
அப்போது, அருகிலுள்ள கோயிலுக்கு காரில் சென்ற பெண், கோயிலில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். தனது காரில் அமர்ந்திருந்தபோது, திடீரென நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து, கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
கார் அடித்து செல்லப்பட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இருப்பினும், மீட்புக் குழுவினர் சென்றடைந்தபோது, வெள்ளத்திற்கு மத்தியில் காருக்குள் பெண் சிக்கியிருப்பதை கண்டனர். பெண்ணை மீட்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ஏணியின் நீளம் சிறியதாக இருந்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் மீட்பு படையினர் திணறினர்.
வெள்ளத்திற்கு மத்தியில் காரில் சிக்கி கொண்ட பெண்:
இந்த இக்கசட்டான சூழ்நிலையில், புத்திசாலித்தனமாக செயல்பட்ட உள்ளூர்வாசிகள், மீட்புக் குழு வாகனத்தில் இருந்து கயிற்றை வெளியே எடுத்தனர். கயிற்றை ஒரு கம்பத்தில் கட்டி, பலத்த அலைகளுக்கு மத்தியில் சிக்கிய காருக்கு அருகே சென்று அனைவரையும் வியக்க வைத்தனர்.
Scary visuals emerged from Khark Mangoli Panchkula, where a lady's car was swept away by the sudden excessive water flow in the river, while parked nearby. Hats off to the people who came to their rescue. The lady along with her mother came to pay obeisance at a Temple. pic.twitter.com/Mh24O92rHJ
— Gagandeep Singh (@Gagan4344) June 25, 2023
சுமார் ஒரு மணி நேர முயற்சிக்கு பிறகு, துணிச்சலான உள்ளூர்வாசிகள் அந்தப் பெண்ணை காரில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர். அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிஷ்டவசமாக, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது அந்த கார் மின்கம்பத்தில் மோதி மாட்டிக் கொண்டது. இதனால், அந்த பெண்ணை உயிருடன் மீட்க முடிந்தது. மன உறுதியுடன் துணிச்சலாக செயல்பட்ட உள்ளூர்வாசிகள் அந்த பெண்ணை மீட்டுள்ளனர். மீட்புத் துறையினரும் காரை வெள்ளத்தில் இருந்து மீட்டனர்.