Watch: மொபைல் பயன்படுத்திக்கொண்டே பயணிக்காதீங்க.. ஐ.பி.எஸ் அதிகாரி வெளியிட்ட பகீர் வீடியோ..
சாலைகளில் மொபைல் பயன்படுத்திக்கொண்டே வாகனத்தை இயக்குவதற்கு எதிராக மக்களுக்கு அறிவுரை வழங்குவதற்காக, ஐபிஎஸ் அதிகாரி கலா கிருஷ்ணசாமி, ஒரு ஸ்கூட்டரின் மீது கார் இடிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
மொபைல் பயன்படுத்திக்கொண்டே வாகனம் இயக்குவது ஆபத்து என்பதை விளக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு விழுப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் பெங்களூருவின் போக்குவரத்து (கிழக்கு பிரிவு) டிசிபி, கலா கிருஷ்ணசாமி.
சாலை விதிகள் விழிப்புணர்வு
அறிவுரைகள் கசப்பானவை என்பதை உணர்ந்த முதல் துறை காவல்துறை எனலாம், அந்த அளவுக்கு சாலை பாதுகாப்பு அறிவுரைகளை அறிவுரைகளாக அல்லாமல், ஆக்கப்பூர்வமாகவும், அனைவரிடமும் சென்று சேரும் விதத்திலும் செய்து வருகின்றனர். அதற்கு அவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது சமூக வலைத்தளங்கள்தான். அதன் மூலம் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு அதிக மக்களை விரைவாகவும், தாக்கத்துடனும் சென்றடைவதால் காவல்துறையின் அதிகாரப்பூர்வ பக்கங்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த முறையை பின்பற்றுகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி கலா கிருஷ்ணசாமி
குறிப்பாக ஐபிஎஸ் அதிகாரி கலா கிருஷ்ணசாமி தொடர்ச்சியாக இதனை அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்து வருகிறார். சாலைகளில் மொபைல் போன் பயன்படுத்திக்கொண்டே வாகனத்தை இயக்குவதற்கு எதிராக மக்களுக்கு அறிவுரை வழங்குவதற்காக, ஐபிஎஸ் அதிகாரி கலா கிருஷ்ணசாமி, ஒரு ஸ்கூட்டரின் மீது கார் இடிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
வெளியிட்ட வீடியோ
பெங்களூருவின் கலா கிருஷ்ணசாமி, போக்குவரத்து (கிழக்கு பிரிவு) டிசிபி, தற்போது வெளியிட்டுள்ள விடியோவில், ஒருவர் மொபைல் போனை பார்த்துக்கொண்டே தனது ஸ்கூட்டரில் சாலையை கடந்து வருகிறார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த கருப்பு நிற கார் ஒன்று சத்தமாக ஹாரன் எழுப்பிக்கொண்டே வந்து அவரை மோதிவிடாமல் இருக்க இடது புறம் வளைகிறது. இருந்தும் அந்த பைக்கின் முன் பக்கம் லேசாக மோதிவிட்ட அந்த கார் அதன் பின் சாலையோரம் உள்ள கடையின் மீது மோதுகிறது.
" ವಾಹನ ಚಾಲನೆ ವೇಳೆ ನಿಮ್ಮ ಗಮನ ರಸ್ತೆಯ ಮೇಲಿರಬೇಕೆ ಹೊರತು ಮೊಬೈಲ್ ನ ಮೇಲಲ್ಲ ". pic.twitter.com/i36TMFYu28
— Kala Krishnaswamy, IPS DCP Traffic East (@DCPTrEastBCP) April 25, 2023
'கவனம் சாலையில்தான், மொபைலில் அல்ல'
அதிர்ஷ்டவசமாக ஸ்கூட்டரில் வந்தவருக்கு ஒன்றும் ஆகவில்லை. எழுந்து வந்து கீழே விழுந்த மொபைலை எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறார். அப்போது கூட ஸ்கூட்டரை முதலில் கவனிக்கவில்லை என்று கமென்டில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகளை வெளியிட்ட ஐபிஎஸ் அதிகாரி கலா கிருஷ்ணசாமி, "வாகனம் ஓட்டும்போது, கவனம் சாலையில் இருக்க வேண்டும், மொபைலில் அல்ல," என்று கன்னடத்தில் எழுதியுள்ளார். இந்த வீடியோ இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் சென்று சேர்ந்துள்ளது.