Waqf Amendment Bill: இரவோடு இரவாக நிறைவேற்றம் - விரைவில் அமலாகிறது புதிய வக்பு வாரிய சட்டம் - ஆதரவும், எதிர்ப்பும்
Waqf Amendment Bill: வக்பு வாரிய திருத்த மசோதா 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

Waqf Amendment Bill: வக்பு வாரிய திருத்த மசோதா மீதான வாக்களிப்பில், 128 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
வக்பு வாரிய மசோதா:
மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவையில், வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேரம் நீடித்த காரசார விவாதங்களுக்குப் பிறகு, மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் மாநிலங்களவையிலும் புதிய வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்து, விரைவிலேயே குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று மசோதா சட்டமாக அமலுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு:
மாநிலங்களவையில் வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜுன் கார்கே, ”இந்த மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளன. சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதற்காக வக்பு திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் அதற்கு ஒதுக்கப்பட்டதைக் கூட முடிக்க முடியவில்லை. உள்துறை அமைச்சர் இதை ஒரு கௌரவப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன் . இது இஸ்லாமியர்களுக்கு நல்லதல்ல, அரசியலமைப்பிற்கு எதிரானது. நல்லிணக்க சூழலைப் பராமரிக்க முயற்சி செய்யுங்கள், அதைத் தூண்டிவிடாதீர்கள்" என தெரிவித்தார்.
மத்திய அரசு பதில்:
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பேசுகையில், "வக்பு திருத்த மசோதாவின் அடிப்படை மந்திரம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலைக் கொண்டுவருவதாகும்.ஏனெனில் 2013-25 க்கு இடையில் இந்த சட்டம் தவறான திசையில் இருந்தது. இது இஸ்லாமிய சகோதரர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. நில மாஃபியா இதில் நிறைய பணம் சம்பாதித்துள்ளது. 1913 முதல் 2013 வரை வக்பு சொத்துக்களில் 18 லட்சம் ஹெக்டேர் சொத்துக்கள் இருந்தன. 2013 முதல் தற்போது வரை, 21 லட்சம் ஹெக்டேர் நிலம் வக்பு சொத்துக்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் மற்றும் சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, 2013 வக்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். சட்டம் என்பது ஒரு பரிணாம வளர்ச்சி செயல்முறை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்." என விளக்கமளித்தார்.
சிறுபான்மை அமைச்சகம் விளக்கம்:
சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், ”மாநிலங்களவையின் சில மூத்த உறுப்பினர்கள் வக்பு மசோதா மீது குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் விவாதத்திற்கான பதிலைக் கேட்க அவையில் இல்லை. நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பல திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மசோதாவை எதிர்ப்பது மட்டுமே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவால் தங்களது உரிமைகள் பறிக்கப்படும் என இஸ்லாமியர்கள் அச்சம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.





















