(Source: ECI/ABP News/ABP Majha)
Chhattisgarh CM: சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் தேர்வு.. யார் இவர்?
சத்தீஸ்கர் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், புதிய முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?
மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். மாநில மக்கள் தொகையில் 30 சதவிகிதத்தினர், பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள். மாநிலம் உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது.
கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு, 2018ஆம் ஆண்டு வரை, பாஜகவின் கோட்டையாக இருந்தது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்று பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.
ஆனால், இந்த முறை ஆட்சியை தவறவிட்டுள்ளது காங்கிரஸ். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து முடிந்த தேர்தலில் 54 இடங்களில் வென்று 5 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடித்தது. பெரும் வெற்றியை பதிவு செய்திருந்தாலும், அடுத்த முதலமைச்சர் தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது.
யார் இந்த விஷ்ணு தியோ சாய்?
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராய்ப்பூரில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் குங்குரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் விஷ்ணு தியோ சாய். கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை, சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராக பதவி வகித்தார்.
மோடி தலைமையிலான முதல் அமைச்சரவையில் எஃகு, சுரங்கம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சராகவும் (MoS) பதவி வகித்தார். கடந்த 1999, 2004, 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ராய்கர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 1990 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள தப்காரா தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டு சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த முறை, சிட்டிங் காங்கிரஸ் எம்எல்ஏவான யுடி மிஞ்சை தோற்கடித்து வெற்றிபெற்றார். பழங்குடிகள் அதிகம் வசிக்கும் மாநிலத்தில் முதல் முறையாக பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு, கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடி சமூகத்தை சேர்ந்த அஜித் ஜோகி, முதலமைச்சராக பதவி வகித்தார். பின்னர், அவர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் அல்ல என விசாரணையில் தெரிய வந்தது.
விஷ்ணு தியோ சாயின் சொந்த மாவட்டமான சுர்குஜாவில் உள்ள 14 தொகுதிகளில் பாஜக அனைத்திலும் வெற்றி பெற்றது. முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராமன் சிங்குக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார் விஷ்ணு தியோ சாய்.