(Source: ECI/ABP News/ABP Majha)
சீன விசா விவகாரம்: கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சீன விசா விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீன விசா விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்கே நாக்பால் இந்த தீர்ப்பை வழங்கினார். இதனையடுத்து, தனக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இடைக்கால தற்காப்பை நீட்டித்து உத்தரவிடுமாறு கோரி இன்னொரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த கால அவகாசத்துக்குள் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துவிடுவதாகக் கூறியுள்ளார். ஆனால், அமலாக்கத்துறை சார்பில் கார்த்தி சிதம்பரத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்கவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் இன்னும் நீதிமன்ற உத்தரவு வெளியாகவில்லை. ஒருவேளை நீதிமன்றம் அனுமதி மறுத்தால் அவர் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
வழக்கு விவரம்:
2010-14 க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் பஞ்சாபில் ஒரு மின் திட்டத்திற்காக 250 சீன பயனர்களின் விசாவை எளிதாக்குவதற்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையிலேயே அண்மையில் கார்த்தி சிதம்பரம் தொடர்பான 7 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதேபோல் ஏற்கெனவே 2017, 2019 ஆம் ஆண்டுகளிலும் கார்த்தி சிதம்பரம் ரெய்டு நடவடிக்கைகளுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
2017-ஆம் ஆண்டு ரெய்டு:
2017ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான 17 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. அப்போதும் சிபிஐ ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சென்னை, டெல்லி, குருகிராம் உள்ளிட்ட 17 இடங்களில் சோதனை நடைபெற்றது.
2019-ஆம் ஆண்டு ரெய்டு:
2019ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு உடைய சுமார் 14 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. அப்போது ஐஎன்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக இவர்களுடைய வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியது.
ஏர்செல்-மார்க்சிஸ் வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து கொண்டிருந்த போது ஐஎன்.எக்ஸ் மீடியா வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. 2016ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு ரெய்டுக்குப் பின்னரே ப.சிதம்பரம் ஐஎன்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ கைது செய்தது. அதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் பிணை கிடைத்த பிறகு விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சீனர்களுக்கு விசா பெற்ற விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு நெருக்கடி வலுத்து வருகிறது.
இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகள் போலியானது. தன்னை குறிவைத்து திட்டமிட்டே இத்தகைய வழக்குகள் ஜோடிக்கப்படுகின்றன என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தை ராஜ்ய சபா எம்.பி.யாக உள்ள நிலையில் வேண்டுமென்றே இது போன்று விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருகின்றனர் என்றும் கூறினார்.