"தேச விரோத சக்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருங்க" வார்னிங் கொடுத்த துணை ஜனாதிபதி!
தாய்நாட்டிற்கான நமது அர்ப்பணிப்பு நிலையானதாகவும், அசைக்க முடியாததாகவும் இருக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
சமூக நல்லிணக்கம், குடும்ப அமைப்பு தொடர்பான புரிதல், சுற்றுச்சூழல், சுதேசி மற்றும் குடிமக்களாக செய்ய வேண்டிய கடமைகள் ஆகிய ஐந்து சக்திவாய்ந்த தூண்கள், தேசிய மாற்றத்தின் அடித்தளமாக உள்ளன என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
"தேச விரோத சக்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருங்க"
டெல்லி கண்டோன்மென்ட் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் உள்ள என்சிசி தலைமையக முகாமில் குடியரசு தின முகாம் 2025இன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில், உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், "இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க தேச விரோத சக்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.
தாய்நாட்டிற்கான நமது அர்ப்பணிப்பு நிலையானதாகவும், அசைக்க முடியாததாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், அதுவே நமது இருப்புக்கான அடித்தளமாகவும் இருக்கிறது" என்றார்.
மேலும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பயணத்தை எடுத்துரைத்த அவர், “உலகளவில் பாராட்டப்பட்ட ஒரு எழுச்சியை நாடு கண்டு வருவதால் சவால்கள் வெளிப்படுகின்றன. உலகமே பொறாமைப்படும் ஒரு எழுச்சி, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரையும் பாதிக்கிறது" என்றார்.
துணை ஜனாதிபதி என்ன பேசினார்?
மனித வளர்ச்சிக்குத் தேவையான நற்பண்புகளை புகுத்தும் ஒழுக்கமான சக்தியாக என்சிசி திகழ்வதாக பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், “மனித வளர்ச்சிக்கு முக்கியமான நற்பண்புகளை நீங்கள் உள்வாங்கும் மிகவும் ஒழுக்கமான சக்தியான என்சிசியின் உறுப்பினர் என்ற தகுதி உங்களுக்கு ஒரு பெரிய நன்மையை அளிக்கிறது.
இந்த அமைப்பு தேசியவாதத்தையும், தேசம் முதலில் என்ற அணுகுமுறையையும் விதைக்கிறது. சமூக நல்லிணக்கம், குடும்ப அமைப்பு தொடர்பான புரிதல், சுற்றுச்சூழல், சுதேசி மற்றும் குடிமக்களாக செய்ய வேண்டிய கடமைகள் ஆகியவை தேசிய மாற்றத்தின் அடித்தளமாக உள்ளன.
இந்த ஐந்து தீர்மானங்கள் - நமது பஞ்சபிரான் - நமது சமூகத்தின் நரம்புகளில் பாய்ந்து, தேசியவாதத்தின் வெல்லமுடியாத உணர்வை வளர்க்கிறது. தனிப்பட்ட பொறுப்பு, பாரம்பரிய விழுமியங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வு ஆகியவற்றை கலாச்சார பெருமை, ஒற்றுமை மற்றும் தன்னம்பிக்கையுடன் இணைக்கும் பயணத்தில் அவை நம்மை வழிநடத்துகின்றன" என்றார்.
பஞ்சபிரான் பற்றி மேலும் விவரித்த தன்கர், “வேற்றுமையை தேசிய ஒற்றுமையாக மாற்றும் சமூக நல்லிணக்கம் அவசியம். அடிமட்டத்தில் தேசபக்தி விழுமியங்களை வளர்ப்பது நம் குடும்பங்களுக்குள் அறிவொளியுடன் தொடங்க வேண்டும்.
இந்த குணங்கள் உள்வாங்கப்பட்ட நாற்றங்கால் குடும்பம். பாரத மாதாவை மதிக்கும் அதே வேளையில், நாம் நிலையான சூழலை உருவாக்கவும் வேண்டும். சுதேசி மற்றும் தன்னம்பிக்கை தற்சார்பு இந்தியாவின் சின்னங்கள், அவை தீவிரமாக ஊக்குவிக்கப்பட வேண்டும்" என்றார்.