கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்தது ராகுல் காந்தி இல்லையாம்.. கூட்டத்தில் நடந்ததை விவரமாக சொன்ன எம்பி திருமாவளவன்
கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பது குறித்து தலைவர்களிடையே ஆலோசனை நடைபெற்று வந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று தொடங்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நிறைவடைந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டத்தில் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர்:
கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பது குறித்து தலைவர்களிடையே ஆலோசனை நடைபெற்று வந்தது. அதன்படி, கூட்டணிக்கு இந்தியா (I-N-D-I-A) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என பொருள்படும் அளவுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய இரவு விருந்து கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் பெயர்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள், என்ன பெயர் வைப்பது குறித்து ஆலோசனை நடத்தி இந்தியா என்ற பெயரை இறுதி செய்துள்ளனர்.
இந்தியா என்ற பெயரை தேர்வு செய்தது யார்?
ஆனால், இந்தியா என்ற பெயரை யார் தேர்வு செய்தது என்பது தெரியாமல் இருந்தது. இந்த பெயரை, ராகுல் காந்தி தேர்வு செய்ததாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திதான், இந்தியா என பெயர் வைத்ததாக ஒரு சிலர் கூறினர்.
இதில் தொடர் குழப்பம் நிலவி வந்த நிலையில், இந்தியா என்ற பெயரை வைத்தது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா என குழப்பத்தை தீர்த்து வைத்துள்ளார் கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்.
கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக எடுத்துரைத்த அவர், "இந்த பெயரை மம்தாதான் முன்மொழிந்தார். காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு பிறகு பேசிய அவர், நம் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைக்க வேண்டும் என கூறினார். அனைவரும் ஒப்பு கொண்டனர். சர்வதேச ஜனநாயக அனைவரையும் உள்ளக்கிய கூட்டணி என்ற விரிவாக்கத்தை அவர் கூறினார். நீண்ட ஆலோசனைக்கு பிறகு, இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என பெயர் வைக்கப்பட்டது" என்றார்.
அடுத்த கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விவகாரங்கள் குறித்து முடிவுகளை எடுக்க குழுக்கள் அமைக்கப்படும் என்றும் பிரச்சாரத்தை நிர்வகிக்க டெல்லியில் செயலகம் ஒன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக்கு பதில் முன்னணி என்ற வார்த்தையை பெயரில் சேர்க்க இடதுசாரி கட்சிகள் விரும்பியதாகவும், அதேபோல கூட்டணியின் பெயரில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வார்த்தை இடம்பெறுவதை தவிர்க்க சில கட்சிகள் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.