ரூ. 200 கோடிப்பே... கட்டுகள் நிறைந்த கட்டடத்தில் வசித்த உ.பி., தொழிலதிபர் பியூஷ் ஜெயின் கைது!
உத்தர பிரதேசத்தில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்ற நிலையில் நேற்று தொழிலதிபர் பியூஷ் ஜெயின் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றநிலையில் நேற்று சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ்ஜெயின். இவர், திருமூர்த்தி பிராக்ரன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நறுமண திரவியம் தயாரித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறார். மேலும், பல்வேறு தொழில்களையும் நடத்தி வருகின்றார்.
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த மாதம் சமாஜ்வாதி அக்தர் என்ற வாசனை திரவியத்தை அறிமுகம் செய்தார். இந்நிகழ்ச்சியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். தொழிலதிபர் பியூஷ் ஜெயின், ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஜிஎஸ்டி புலனாய்வு துறை அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகள் இணைந்து பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் பியூஷ் ஜெயினின் கான்பூர் வீட்டில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அகமதாபாத் ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநர் ஜெனரல் கூறுகையில், “சோதனையின் போது மொத்தம் ரூ. 187.45 கோடி பணம் மீட்கப்பட்டது. மேலும் ரூ.10 கோடி பின்னர் கைப்பற்றப்பட்டது. இதில் கன்னாஜில் உள்ள அவரது தொழிற்சாலையில் இருந்து ரூ.5 கோடியும், அவரது வீட்டில் இருந்து ரூ.5 கோடியும் மீட்கப்பட்டது. ஜெயின் தொழிற்சாலையில் கணக்கில் வராத சந்தன எண்ணெய், பல கோடி மதிப்புள்ள வாசனை திரவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதனிடையே சோதனைக்காக அதிகாரிகள் சென்றபோது முதலில் ஜெயின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர், அதிகாரிகள் தொடர்ந்து தொலைபேசியில் அழைப்பு விடுத்த பிறகு அவர் 2 மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார்.
இதுகுறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “கடந்த சில நாட்களாக சமாஜ்வாதி கட்சிக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 257 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பல கிலோ தங்கம் மற்றும் வெள்ளி மீட்கப்பட்டது. இந்த பணம் ஏழைகளுக்கு சொந்தமானது. அது எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
விசாரணையின் போது, பணம் அவரது உறவினர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்று ஜெயின் கூறினார், இருப்பினும் அவரால் எந்த உறுதியான ஆதாரத்தையும் கொடுக்க முடியவில்லை. ஜெயின் கொடுத்த பெயர்களைக் கொண்ட உறவினர்கள் கூட அவரின் வாக்குமூலத்தை மறுத்தனர்.
இதையடுத்து பியூஷ் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இவ்வளவு பெரிய தொகை ஏன் வசூலிக்கப்பட்டது. ஏன் இங்கு இருக்கிறது. இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று தெரிய வேண்டும். ஆனந்தபுரி, கான்பூர், ஆகிய இடங்களில் ரூ. 177.45 கோடி மீட்கப்பட்டது. இப்பணம் தொழில் ரீதியில் பயன்படுத்த வைக்கப்பட்டிருந்ததா? அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அதற்கான முடிவு தெரியும் வரை விசாரணை தொடரும்” எனத் தெரிவித்தனர்.