கார்டூன் பார்த்துக்கொண்டிருந்த 5 வயது சிறுமி! மாரடைப்பால் உயிரிழந்த சோகம் - உ.பியில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இளைஞர்கள் உட்பட பலருக்கு திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த சில காலமாகவே அனைவருக்கும் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது. வழக்கம் போல் வேலை செய்யும் இளைஞர்கள் என அனைவரும் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
5 வயது சிறுமி உயிரிழப்பு:
சமீபத்தில் கூட, கிரிக்கெட் போட்டியின் போது வீரர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சமீபத்தில் 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.
அதாவது, உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் கோட்வாலி என்ற இடத்தில் கடந்த ஜனவரி 21 அன்று மொபைல் போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமினி என்ற சிறுமி தனது தாயிக்கு அருகில் படுக்கையில் படுத்திருந்து போன் பார்த்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் திடீரென கையிலிருந்து போன் கீழே விழுந்து மயக்கமடைந்திருக்கிறார். இதனை அறிந்த சிறுமியின் தாயார், அவரை உடனை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
தொடரும் திடீர் மரணங்கள்:
இதுகுறித்து அம்ரோஹா தலைமை மருத்துவ அதிகாரி சத்யபால் சிங் மேலும் கூறுகையில், "மாரடைப்பால் சிறுமி உயிரிழந்திருக்கலாம். உடலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
அவர் மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்தாரா என்பது பிரேத பரிசோதனையில் தான் தெரியும்" என்று கூறினார். முன்னதாக, டிசம்பர் 16ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவின் பகுதியில் 16 வயது சிறுவன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மேலும், டிசம்பர் 12ஆம் தேதி 12 வயது சிறுவன் ஷிப்ரா வகுப்பறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு ஏன்..?
இதயத்தின் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதே மாரடைப்பு எனப்படுகிறது. மாரடைப்பு (MI) ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு ஒரு பிரச்சினையாக கருதப்பட்டது. 40 வயதிற்குட்பட்ட ஒருவருக்கு மாரடைப்பு என்பது மிகவும் அரிதானதாக இருந்தது.
ஆனால் இப்போது ஒவ்வொரு ஐந்து மாரடைப்பு நோயாளிகளில் ஒருவர் 40 வயதிற்குட்பட்டவர் என கூறப்படுகிறது. மாரடைப்பு ஏற்படுவது மிகவும் பொதுவானது என கூறப்படுகிறது. 2000 மற்றும் 2016 க்கு இடையில், 20-கள் அல்லது 30-களின் ஆரம்பத்தில், இளம் வயதினருக்கு மாரடைப்பு விகிதம் ஒவ்வொரு ஆண்டும் 2% அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
கரோனரி இதய நோய் (CHD) மற்ற சிக்கல்களுடன் சேர்ந்து, மாரடைப்பு (MI) ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நோய் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.