உத்தரபிரதேசத்தில் இன்று 4ம் கட்ட சட்டசபை தேர்தல்..! தொடங்கியது வாக்குப்பதிவு..!
UP Election 4th Phase : உத்தரபிரதேசத்தில் இன்று 59 தொகுதிகளுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாட்டிலே அதிக சட்டசபைதொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. ஆட்சியை தக்கவைக்கவும், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி ஆட்சியை பிடிக்கவும் தீவிரமாக போராடி வருகினறன.
உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே 3 கட்டங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று உத்தரபிரதேசத்தில் உள்ள 9 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த 59 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் தொகுதி அடங்கிய ரேபரேலி மாவட்டமும், நாட்டைய உலுக்கிய 4 விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட லக்கிம்பூர்கேரி மாவட்டமும் அடங்கும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 59 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் 624 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
4ம் கட்ட வாக்குப்பதிவிற்காக 24 ஆயிரத்து 643 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. உசைன்கஞ்ச், பிந்த்கி, பதேபூர் ஆகிய தொகுதிகள் மிகவும் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற உள்ளது. இன்று நடைபெறும் 4ம் கட்ட வாக்குப்பதிவிற்கு தேர்தல் நடைபெறும் இடங்களில் 400 கம்பெனி மத்திய படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10-ந் தேதி நடைபெற உள்ளது. நாட்டிலே அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் என்பதால், அந்த மாநிலத்தின் தேர்தல் பிற மாநிலங்களாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Today Headlines : தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி..! உ.பி.யில் 4ம் கட்ட தேர்தல்..! ரஷ்ய அதிபர் புதின் புதிய அறிவிப்பு..! முக்கியச்செய்திகள் பல
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்