Uttarkhand Tunnel Collapse: உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 40 தொழிலாளர்களை மீட்பதில் தொடர் சிக்கல்...என்னதான் நடக்கிறது?
உத்தர காண்டில் சுரங்க விபத்தில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.
Uttarkhand Tunnel Collapse: உத்தர காண்டில் சுரங்க விபத்தில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.
சுரங்கப்பாதை விபத்து:
உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் - கர்னாபிரயாக் இடையே ரயில்வே திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதோடு, உத்தர்காசி மாவட்டத்தில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இங்கு வழக்கம்போல், சுரங்கம் அமைக்கும் பணியில் சுமார் 50க்கும் மேற்பட்டார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நான்கரை கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதையின் 150 மீட்டர் நீளமான பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அங்கு பணியில் இருந்த 40 பேர் சிக்கி உள்ளதாக தெரிகிறது. பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரகண்ட், இமாச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மாவட்ட நிர்வாககும், உத்தரகாசி காவல் கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, சுரங்கப்பாதை அமைக்கும் அமைப்பான தேசிய நெடுங்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக லிமிடெட் ஊழியர்களும் சம்பவ இடத்தில் இருக்கின்றனர். சுமார் நான்கு நாட்களாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருவது பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தொடரும் மீட்பு பணிகள்
தொடர்ந்து நான்கு நாட்களாக, மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில், சுரங்கப்பாதையில் மேல் பகுதியை துளையிட்டு, ஆக்ஸிஜன் குழாய்கள் அனுப்பப்பட்டன. சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்கள் உடன் பைப்கள் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைப்கள் மூலம் தண்ணீர், உணவு, மருந்துகள் ஆகியவை செலுத்தப்பட்டு வருகின்றன. வாக்கி டாக்கி மூலம் சிக்கியவர்களுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று 900 மில்லி மீட்டர் ஸ்டீப் பைப்பை செல்லுத்தும் பணி நடந்தது. இதற்கான ட்ரில்லிங் பணிகள் நேற்று காலை முதல் நடைபெற்று வந்தன. ஆனால், தொழில்நுட்ப பிரச்னையால் ட்ரில்லிங் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதன் காரணமாக மற்றொரு ட்ரில்லிங் இயந்திரங்கள் கொண்ட வர ஏற்பாடு நடந்து வருகின்றது. இருப்பினும், அதி வேகத்தில் ட்ரில்லிங் பணிகள் நடந்தால் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த ட்ரில்லிங் இயந்திரம் டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட உள்ளது. இதனால், அடுத்த நான்கு மணி நேரத்தில் மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சிக்கிய தொழிலாளர்களை மீட்க தாமதம் ஆனதை கண்டித்து பல தொழிலாளர்கள் மீட்பு தளத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாநில பேரிடர் மீட்பு படை கமாண்டண்ட் கூறுகையில், "சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர். யாருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. குறிப்பிட்ட நேர இடைவெளியில் பேசிக் கொண்டு இருக்கிறோம். அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள்" என்றார்.