(Source: ECI/ABP News/ABP Majha)
Adani Group: 'உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்திற்கும் எங்களுக்கும் தொடர்பா?' அதானி குழுமம் பரபரப்பு விளக்கம்!
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது உத்தரகாசி. உத்தரகாசியில் தேசிய நெடுஞ்சாலை பணியின்போது சுரங்கப்பாதை ஒன்று அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த சுரங்கப்பாதையின் நடுவே மணல் சரிந்ததில் சுமார் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
அதானி குழுமம் விளக்கம்:
கடந்த 12-ந் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தால் உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் தற்போது வரை ஆரோக்கியமாக இருந்தாலும், அவர்கள் மீட்கப்படாதது மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சுரங்கப்பாதை பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் அதானி நிறுவனம் என்றும், அவர்களால்தான் இந்த அசம்பாவிதம் அரங்கேறியதாகவும் இணையத்தில் தொடர்ந்து தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில்,” உத்தரகாண்டில் நிகழ்ந்த துரதிஷ்டவசமான சுரங்கப்பாதை விபத்து சம்பவத்தில் எங்களை இணைக்க சில மோசமான முயற்சிகள் மேற்கொள்வது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த முயற்சியையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
Clarification on nefarious attempts to link us to the unfortunate collapse of a tunnel in Uttarakhand. pic.twitter.com/4MoycgDe1U
— Adani Group (@AdaniOnline) November 27, 2023
அதானி குழுமத்திற்கோ அல்லது அதன் துணை நிறுவனங்களுக்கோ சுரங்கப்பாதையின் கட்டுமானத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் மிக அழுத்தமாக தெளிவுபடுத்துகிறோம். சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் எங்களிடம் எந்த பங்குகளும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.”
இவ்வாறு அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
சிக்கித்தவிக்கும் 40 தொழிலாளர்கள்:
சுரங்கப்பாதை பணியின்போது 40 தொழிலாளர்கள் சிக்கியதற்கு காரணம் தனியார் நிறுவனத்தின் அலட்சியமே காரணம் என்று பலரும் கூறி வந்த நிலையில், பா.ஜ.க. முன்னாள் எம்.பி. சுப்பிரமணிய சுவாமி, உத்தரகாண்ட் சுரங்கப்பாதை எந்த தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது? அதன் பங்குதாரர்கள் யார்? அதானி குழுமத்தின் ஒரு நிறுவனமா? நான் கேட்கிறேன் என்று அவர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவிற்கு பிறகு அதானி குழுமத்தின் மீது கடும் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
இந்த சூழலில், அதானி குழுமம் உத்தரகாசி சுரங்கப்பாதை பணிகளுக்கும், தங்களுக்கும் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளனர். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை 15 நாட்களாகியும் மீட்காததால் பொதுமக்கள் அரசின் மீது வேதனையையும், அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உத்தரகாசியில் தற்போது விபத்திற்குள்ளான சுரங்கப்பணிகளை ஹைதரபாத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் நவயுகா என்ஜினியரிங் குழு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Vande Bharat Express: அதிவேகமாக ஓடிகொண்டிருந்த ஒடிசா வந்தே பாரத் ரயில்.. கற்களை வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்..!
மேலும் படிக்க: Uttarkashi Tunnel Collapse: 41 தொழிலாளர்களை மீட்க 6 திட்டங்கள்.. நிபுணர்களின் கணிப்புகளில் எது சாத்தியமாகும்..?