இப்படி ஒரு நஷ்ட ஈடு வழக்கா? மாப்பிள்ளை ஊர்வலத்தால் சிக்கல்! மணமகனுக்கு ஷாக் கொடுத்த நண்பர்கள்!
திருமணத்தில் மாப்பிள்ளை ஊர்வலத்தை விரைவாக நடத்தியதற்காக நண்பர் ஒருவர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தியாவில் திருமண ஊர்வலங்கள் எப்போதும் மிகவும் ஆடம்பரமான சடங்குகளில் ஒன்று. குறிப்பாக வட இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் மாப்பிளை அழைப்பு மிகவும் விமர்சையாக இருக்கும். அப்படி ஒரு திருமணத்தில் மாப்பிளை அழைப்பை விரைவாக தொடங்கியது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாப்பிள்ளை மீது நஷ்ட ஈடு வழக்கு போடும் வரை பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரிதுவார் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற இருந்தது. தன்னுடைய திருமண வேலைகளுக்கு ரவி நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து சந்திரசேகர் என்ற நண்பர் மற்றும் சக நண்பர்கள் அவருக்கு உதவியாக இருந்துள்ளனர். குறிப்பாக திருமண அழைப்பிதழ் கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து உதவி வந்துள்ளனர்.
இந்தச் சூழலில் திருமண நாள் அன்று மாலை 5 மணிக்கு மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்க இருந்தது. ஆனால் அன்று சற்று விரைவாக மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கியுள்ளது. சரியாக 5 மணிக்கு வந்த சந்திரசேகர் உள்ளிட்ட நண்பர்கள் திருமண ஊர்வலம் விரைவாக தொடங்கியது தொடர்பாக அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் ரவியை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது மணமகன் ரவி சற்று கோபமாக நீங்கள் யாரும் என்னுடைய திருமணத்திற்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
இதைக் கேட்டு சந்திரசேகர் மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர் தன்னுடைய நண்பரும் மணமகனுமான ரவி மீது நஷ்ட ஈடு வழக்கு போட திட்டமிட்டுள்ளார். அதன்படி ஒரு வழக்கறிஞரை நாடி சுமார் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், திருமணத்திற்காக வேலை செய்யும் போது ரவியின் உறவினர்கள் அவரை மனதளவில் காயப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த மன உளைச்சலுக்கு ரவி நஷ்ட ஈடாக 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்த வழக்கு அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழாவில் மாப்பிள்ளை ஊர்வலம் விரைவாக நடைபெற்றதற்கு ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்