Pregnant Daughter Murder: கர்ப்பிணி கழுத்தை நெரித்து கொலை.. காதலனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க மறுத்ததால் பெற்றோர் செய்த கொடூரம்..
மனதை பதற வைக்கும் வகையில் உத்தர பிரதேசத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.
ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த அறிக்கைகளுக்கு எல்லாம் வலுச்சேர்க்கும் விதமாக ஐநா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கையில், "ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்:
இந்த நிலையில், மனதை பதற வைக்கும் வகையில் உத்தர பிரதேசத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. எட்டு மாத கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை நெரித்து அவரது பெற்றோரே கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை விவரித்துள்ள காவல்துறை அதிகாரி ஒருவர், "தனது மகளை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இந்த வழக்கில் காதலனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க மறுத்த 19 வயது மகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என சந்தேகிக்கிறோம். இளம்பெண்ணும், அவரது காதலனும் கடந்த 2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த ஆண்டு டிசம்பரில் இளம்பெண் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அவரது காதலன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்ப்பிணி கழுத்தை நெரித்து கொலை செய்த பெற்றோர்:
இதை தொடர்ந்து, காதலனுக்கு எதிராக பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் காதலனுக்கு எதிராக அந்த பெண் வாக்குமூலம் அளிக்க மறுத்துள்ளார். இதனால், 8 மாத கர்ப்பிணியை அவரது பெற்றோர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, ஷாப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோய்லா கிராமத்தில் உள்ள ஆற்றில் அவரது உடல் வீசப்பட்டது" என்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் (SP) சஞ்சீவ் சுமன், "பெண்ணின் பெற்றோர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் கைது செய்யப்பட்டனர். பெற்றோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இந்தப் பெண்ணின் பெற்றோர், காதலனுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வேண்டும் என விரும்பினர். ஆனால், அவர் அதற்கு மறுத்துவிட்டாள். இதனால் கோபமடைந்த பெற்றோர். அவரைக் கொன்றனர்" என்றார்.