இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கும் குடும்பத்துக்கு அரசு நலத்திட்டங்கள் கிடையாது - உத்தரபிரதேச அரசு
மேலும், ஒரு குழந்தை கொள்கையை கடைபிடிக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு சலுகைகளை மேலும் தாராளமயமாக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
நாளை உலக மக்கள் தொகை நாள் (World Population Day) கொண்டாடப்படும் வேளையில், உத்தர பிரதேச அரசு, பத்தாண்டுக்கான (2021- 30 ) மக்கட்தொகைக் கொள்கையை வெளியிட இருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் அம்மாநிலத்தின் மக்கள் தொகை 20 கோடியைத் தாண்டியது.
இந்தியாவின் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உ.பி திகழ்கிறது. 1900- 50 ஆகிய காலகட்டங்களில் இதன் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் வெறும் 30% ஆக இருந்த நிலையில், சுதந்திரத்திற்கு பிந்தைய காலங்களில்( 1950- 2011) இதன் வளர்ச்சி விகிதம் சுமார் 216% அதிகரித்துள்ளதாக கணக்கிடப்படுகிறது.
91ல் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 8 கோடியாக இருந்த மக்கட்தொகை, 2011ல் 16 கோடியாக அதிகரித்தது. 2011ல் மக்கள் தொகை 19 கோடியைத் தாண்டியது. அதாவது, கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) உத்தர பிரதேச மாநிலத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 20% ஆக அதிகரித்தது. அதற்கு, முந்தைய பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை 25% ஆக அதிகரித்தது. இதே கால கட்டத்தில், தேசிய அளவிலான மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் சரியத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மக்கட்தொகைக் கொள்கை புதுப்பிப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "கல்வியறிவின்மை, வறுமை, சமுதாயத்தில் பெண்களுக்கு அதிகாரம் குறைவாக இருப்பது ஆகியவை மக்கட்தொகை பெருக்கத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. சில சமூகங்களில் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை. சமூக அளவிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் புதிய கொள்கையின் நோக்கமாகும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, இரு குழந்தை பெற்றெடுப்பு கொள்கையை மீறும் பெற்றோர்கள் அரசாங்கத் திட்டங்களின் பயன்கள் மற்றும் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதிகளை இழக்கும் விதமாக மக்கட்தொகைக் கட்டுப்பாட்டுச் சட்ட வரைவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பும் பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒரு குழந்தை கொள்கையை கடைப்பிடிக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு சலுகைகளை மேலும் தாராளமயமாக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இருப்பினும், குடும்பக் கட்டுப்பாடு கொள்கையின் ஒரு அங்கமாக, பெற்றோர்கள் எத்தனைக் குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயிப்பது தவறான முன்னுதாரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2020-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்த மத்திய சுகாதார அமைச்சகமும் குழந்தைகளை பெற்றெடுக்க இலக்கு நிர்ணயிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தது.
தன்னார்வத்தோடும் தகவல்களைத் தெரிந்துகொண்டு மக்கள் தங்கள் இசைவுடன் மகப்பேறு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தான் 2020 தேசிய மக்கட்தொகைக் கொள்கையும் வலியுறுத்துகிறது.