லக்கிம்பூர் கேரி சம்பவம்: கிடுக்குப்பிடியில் அமைச்சர் மகன் - இரும்புப் பெட்டியில் 5000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த உ.பி. போலீஸ்
லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி கிராமத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட சம்பவம். விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு அண்மையில் தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், 'இந்த சம்பவம் கவனக்குறைவால் நடக்கவில்லை. கொலை செய்யும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி' என, குறிப்பிட்டது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச போலீஸார் இன்று (ஜன.3) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
இரும்புப் பெட்டி; இரண்டு பூட்டுகள்:
லக்கிம்பூர் குற்றவியல் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு போலீஸார் குற்றப்பத்திரிகையைக் கொண்டு வந்தனர். ஜீப்பில் இருந்து ஒரு பெரிய இரும்புப் பெட்டி இறக்கப்பட்டது. அதில் இரண்டு பெரிய பூட்டுகள் போடப்பட்டிருந்தன. அந்தப் பெட்டியில் 5000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை இருந்தது. அது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பு வழக்காடும் அதிகாரி யாதவ், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் தேதி ஒதுக்குவதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
5 பேர் உயிரிழப்பு:
கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி தான் அந்தச் சம்பவம் நடந்தது. உத்தரப்பிரதேசத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவாசாயிகள் போராட்டம் மேற்கொண்டிருந்தனர். லக்கிம்பூரில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க அமைச்சர் அஜய் மிஸ்ரா வருவதாக தகவல் வந்தது. இதனையடுத்து அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் போராட்டத்திற்கு கவனம் ஈர்க்க விவசாயிகள் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில். மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை வழிமறிக்க முற்பட்டனர். ஆனால், அவர் இருந்ததாக சொல்லப்படும் கார் விவசாயிகள் மீது ஏறிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. காரை எற்றியதாலும், சிலர் (காவல்துறை) துப்பாக்கிச்சூடு நடத்தியதிலுமென விவசாயிகள், பத்திரிக்கையாளர் என 5 பேர் உயரிழந்தனர்.
இந்த கோர வீடியோவை காங்கிரஸ் கட்சி முதன்முதலில் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் பகிர்ந்தது.
இந்த கோர சம்பவத்துக்குக் காரணமான ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஷ்ராவைப் பதவிநீக்கம் செய்து, சட்டநடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனவும், ஆஷிஷ் மிஸ்ராவை கொலைவழக்கின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் வலியுறுத்தின. ஆனால், உச்ச நீதிமன்ற வழக்கிற்குப் பின் சரியாக 12 நாட்களுக்குப் பின்னரே ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ்:
இந்தச் சம்பவம் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு பஞ்சாப், உ.பி.யில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநில விவசாயிகளே போராட்டக் களத்தில் அதிகமிருந்ததாலேயே பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதாகக் கூறப்பட்டது. சட்டங்களை வாபஸ் பெற்றால் நாடாளுமன்றம் இயங்கும் என்று பாஜக கணித்தாலும் கூட எதிர்க்கட்சிகள் அஜய் மிஸ்ராவை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோஷமிட்டு நாடாளுமன்றத்தை முடக்கின.
இந்நிலையில், லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.