UP Election : ஆள் தூக்கும் படலம் முடிந்தது... அரியணையை தூக்கப் போவது யார்? மாப்பி... இது உ.பி., அப்டேட்!
UP Election: ‛‛கண்ணுக்கெட்டிய தூரம் வரை காங்கிரசுக்கான அடித்தளம் உத்தரப்பிரதேசத்தில் கிடைக்காது என்றே தெரிகிறது’’
உத்தரப்பிரதேச சட்டமன்றத்தேர்தல் பரபரப்பின் உச்சத்தை எட்டியிருக்கிறது. கோவா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை அறிவித்தது முதல் 5 மாநிலங்களிலும் தேர்தல் வியூகம் அனல் பறக்கிறது. இந்த 5 மாநிலங்களில் அதிகம் பேரால் உற்றுநோக்கப்படுவது உத்தரப்பிரதேசம் தான். இந்தியாவிலேயே அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது உத்தரப்பிரதேசம். மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜக, சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றன.
பாஜகவுடன் நிஷத் கட்சி, அப்னா தல் என்ற கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. ஆனால், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி மெகா கூட்டணியை அமைத்துள்ளன. சமாஜ்வாதி கட்சி, ராஸ்டிரிய லோக் தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி உள்ளிட்ட பெரிய கட்சிகளும், சமாஜ்வாதி கட்சியின் சின்னத்தில் 12 சிறு கட்சிகளும் போட்டியிடுகின்றன. அதுமட்டுமில்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாகவும் போட்டியிடுகின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியும் வரிந்துகட்டிக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. 2012ல் முதல் முறையாக உத்தரபிரதேசத்தின் முதலமைச்சரான அகிலேஷ் யாதவ் 2017ல் யோகி ஆதித்யநாத் அலையில் வீழ்ந்தார். அதன்பிறகு 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் அஸாம்கர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.
இதற்கு முன்பு சட்டப்பேரவை கவுன்சில் வழியாக இதற்கு முன்பு முதலமைச்சரான அகிலேஷ் யாதவ் இந்த முறை முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அகிலேஷ்யாதவ் போட்டியிடப்போகும் தொகுதி எது என்ன என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உத்தரபிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் தனது சொந்த மாவட்டமான கோரக்பூரில் உள்ள சதார் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோரக்பூர் மாவட்டத்தில் இதற்கு முன்பு 1971ல் அப்போதைய முதலமைச்சர் திரிபுவன் நாராயண் சிங் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதே மாவட்டத்தில் உள்ள தொகுதியில் தான் தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் போட்டியிடுகிறார்.
பாஜகவிற்கு பிரதமர் மோடி, அமித்ஷா என்று பாஜகவின் அத்தனை தலைவர்களும் பிரசாரம் செய்ய, சமாஜ்வாதிக்காக பிரசாரம் செய்ய களம் இறங்குகிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி. அதோடு, அவரது கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இத்தேர்தலில் உத்தரபிரதேசத்தில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துவிட்டது. இதனால், உத்தரப்பிரதேசத்தை கைப்பற்றப் போவது யார் என்ற எந்த முடிவுகளையும் கணிக்க முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில், உத்தரபிரதேசத்தை முன்பு ஆட்சி செய்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியான மாயாவதி இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், அதற்கு பதிலாக தனது கட்சியினரின் வெற்றிக்கு பாடுபடப்போவதாகவும் அறிவித்துவிட்டார். காங்கிரஸ் கட்சியோ தனித்துப் போட்டியிடுகிறது. ராகுல்காந்தியும், ப்ரியங்கா காந்தியும் தான் இப்போதைக்கு அங்கு தேர்தலை சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை காங்கிரசுக்கான அடித்தளம் உத்தரப்பிரதேசத்தில் கிடைக்காது என்றே தெரிகிறது.
இதற்கிடையில், உச்சக்கட்ட பரபரப்பாக தற்போதைய ஆளும் பாஜகவில் இருந்து 3 அமைச்சர்கள், 6 எம்எல்ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து பாஜக தலைமைக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பொதுமக்களிடத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்கள்; இவர்கள் எங்கள் கட்சியில் சேர்வதால் எங்களுக்கு பலம் தான் என்று கூறுகின்றனர் சமாஜ்வாதி கட்சியினர். அதற்கு முன்பு சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, முலாயம் சிங் யாதவின் உறவினரும், சிர்சாகஞ்ச் தொகுதியின் எம்எல்ஏவாகிய ஹரிஓம் யாதவ் பாஜகவில் இணைந்திருந்தார். இப்போது முலாயம் சிங்கின் மருமகளும், அகிலேஷ் யாதவின் தம்பி பிரதீக் யாதவ் மனைவியுமான அபர்ணா யாதவ் இப்போது பாஜகவில் இணைந்திருக்கிறார். அகிலேஷ் யாதவால் தனது குடும்பத்தினரையே கட்டுப்படுத்த முடியவில்லை என்று விமர்சிக்கின்றனர் பாஜகவினர். முலாயம் சிங்கின் மகள் பாஜகவிற்கு சென்றது முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், அகிலேஷ் யாதவ் தரப்பிலோ அபர்ணா யாதவ் பாஜகவுக்குச் சென்றது உண்மையில் எங்களுக்கு சந்தோஷம் தான். அங்கிருந்து எங்கள் கொள்கைகளை பரப்புவார். அதோடு, எங்களால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கமுடியவில்லை. ஆனால் பாஜக அவருக்கு வாய்ப்பு வழங்குகிறதே என்று சந்தோஷப்படுகின்றனர். கடந்த 2017ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் அபர்ணா போட்டியிட்டு தோல்வியடைந்தார். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவரான அபர்ணா தேர்தலில் வென்று முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்தை நேரில் சென்று வாழ்த்தியது கட்சிக்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதோடு, பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு அவரை பாராட்டவும் செய்திருந்தார். அபர்ணா என்றாவது ஒருநாள் பாஜகவிற்குச் செல்வார் என்று எங்களுக்கு முன்பே தெரியும். அவர் அங்கு போனதில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை என்று சமாஜ்வாதி கட்சியினர் கூறியுள்ளனர்.
பிப்ரவரி 10 முதல் மார்ச் 7வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. இதற்கிடையில் விர்ச்சுவல் பொதுக்கூட்டம் என்று அனுமதி வாங்கிவிட்டு பொதுமக்களை கூட்டி தேர்தல் ஆணையம் விதித்த கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக அகிலேஷ் யாதவிற்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது தேர்தல் ஆணையம். இது முதல் எச்சரிக்கை என்றும், இனிமேல் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்திருக்கிறது தேர்தல் ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.