இந்திய மக்கள் தொகையை கிண்டல் செய்யும் விதமாக கார்டூன்...சர்ச்சையை ஏற்படுத்திய ஜெர்மன் இதழ்..பதிலடி கொடுத்த இந்தியா..!
சீன, மேற்குலக நாடுகளுக்கிடையே பதற்றமான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், ஜெர்மனியின் பிரபல பத்திரிகை ஒன்று சீனாவை புகழும் விதமாக கார்டூன் வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
உலகின் மக்கள் தொகை அதிகமான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற உள்ளது. இந்தாண்டின் மத்திக்குள் சீனாவை விட இந்தியா 30 லட்சம் மக்கள் தொகை அதிகமாக பெற போகிறது என ஐநா தெரிவித்திருந்தது. இதை கிண்டல் செய்யும் விதமாக பிரபல ஜெர்மன் இதழ் டெர் ஸ்பீகல் கார்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தது.
சர்ச்சையை ஏற்படுத்திய ஜெர்மன் இதழின் கார்டூன்:
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இனவெறி மனப்பான்மையுடன் இந்த கார்டூன் வெளியிடப்பட்டதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சர்ச்சையை கிளப்பும் விதமாக வெளியிடப்பட்ட கார்டூனில் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இந்திய ரயிலைக் காணலாம்.
இதற்கு அருகே உள்ள ரயில் பாதையில் இரண்டு ஓட்டுநர்களுடன் இயக்கப்படும் நவீனமயமாக்கப்பட்ட சீன புல்லட் ரயிலை இந்திய ரயில் முந்தி செல்வது போல கார்டூன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர், இதற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.
கார்டூனை கண்டித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறையின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "டெர் ஸ்பீகலின் அன்புள்ள கார்ட்டூனிஸ்ட். இந்தியாவை கேலி செய்யும் உங்கள் முயற்சி எப்படி இருந்தாலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவுக்கு எதிராக பந்தயம் கட்டுவது புத்திசாலித்தனம் அல்ல. இன்னும் சில வருடங்களில் ஜெர்மனியை விட இந்தியாவின் பொருளாதாரம் பெரியதாக இருக்கும்" என பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய மக்கள் தொகையை கிண்டல் செய்யும் விதமாக கார்டூன்:
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் காஞ்சன் குப்தா, இதுகுறித்து குறிப்பிடுகையில், "ஜெர்மனி இது மூர்க்கத்தனமான இனவெறி. இப்படி, இந்தியாவை கேலி செய்வது கள நிலவரத்திற்கு ஒத்திருக்கவில்லை. சொந்த பயனுக்காக இந்தியாவை சிறுமைப்படுத்தி சீனாவை உயர்த்தி காட்டுவதே இதன் நோக்கம்" என சாடியுள்ளார்.
"ஜெர்மன் பத்திரிக்கையின் கார்ட்டூன் மோசமாக உள்ளது. மேற்கத்திய நாடுகள் இந்தியாவை ஏழைகளாகவும், கஷ்டப்படுபவர்களாகவும் சித்தரிக்க விரும்புகின்றன. அவர்கள் இந்தியாவின் வந்தே பாரத் அல்லது வரவிருக்கும் புல்லட் ரயில்களைக் காட்ட மாட்டார்கள். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா ஜெர்மனியை முந்தி 4வது பெரிய ஜிடிபியாக மாறும் வரை காத்திருக்க முடியவில்லை" என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்பி விஜயசாய் ரெட்டி தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, இந்தியாவின் மக்கள் தொகை, 1.4286 (142 கோடியே 86 லட்சம்) பில்லியனாக இருக்கும் என கணிக்கப்படடுள்ளது.
அதே நேரத்தில், சீனாவின் மக்கள் தொகை 1.4257 (142 கோடியே 57 லட்சம்) பில்லியனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 340 மில்லியன் (34 கோடி) மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சீன, மேற்குலக நாடுகளுக்கிடையே பதற்றமான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், ஜெர்மனியின் பிரபல பத்திரிகை ஒன்று சீனாவை புகழும் விதமாக கார்டூன் வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.