‘மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் மதிப்பது’ - பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
மதச்சார்பின்மை என்பது மதச்சார்பற்று இருப்பது அல்ல என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட முக்கியமான கட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசுமுறை பயணமாக பிரட்டன் சென்றுள்ளார்.
ராயல் ஓவர்-சீஸ் லீக் கிளப் சார்பாக லண்டனில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், 'இந்தியர்கள், உலகை எப்படி பார்க்கிறார்கள்' என தலைப்பில் பேசினார்.
"மதச்சார்பின்மை என்பது மதச்சார்பற்று இருப்பது அல்ல"
அப்போது, மதச்சார்பின்மை குறித்து பேசிய அவர், "இந்தியாவைப் பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது மதச்சார்பற்று இருப்பது அல்ல. ஆனால், அனைத்து மதங்களையும் சமமான அளவில் மதிப்பதே ஆகும். கடந்த கால அரசாங்கத்தின் சமரச கொள்கைகள், நாட்டின் பெரும்பான்மை மதத்தை குறைத்து மதிப்பிட்டது. சமத்துவம் என்ற பெயரில், கடந்தகால அரசு அப்படி செய்தது" என்றார்.
பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், நேரு காலத்திலிருந்து பிற்பற்றப்பட்டு வந்த கொள்கையில் இருந்து விடுப்பட்டு குறுகிய மனப்பான்மை கொண்ட இந்து பெரும்பான்மை நாடாக மாறியிருக்கிறதா என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "இந்தியா நிச்சயமாக மாறிவிட்டது.
ஆனால், அந்த மாற்றம் என்பது குறுகிய மனப்பான்மையாக மாறிவிட்டது என்று அர்த்தம் அல்ல. நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதில் உறுதியாக மாறிவிட்டது. நேருவின் காலத்தில் இருந்து இந்தியா மாறிவிட்டதா என கேட்டால் அதற்கு ஆமாம் என்பதுதான் பதில். ஏனென்றால், அந்த சகாப்தத்தின் அனுமானங்களில் ஒன்று, நமது அரசியலை தீர்மானிக்கக்கூடிய சிந்தனையாக இருந்தது.
"சிறுபான்மையினரை ஏமாற்றும் அரசியல்"
மதச்சார்பின்மையை நாம் எப்படி வரையறுக்கிறோம் என்பதுதான் அந்த அனுமானம். எங்களைப் பொறுத்தவரை, மதச்சார்பின்மை என்பது மதச்சார்பற்று இருப்பது என்று அர்த்தமல்ல. எங்களைப் பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாத மதிப்பதே ஆகும்.
தற்போது அரசியல் களத்தில் என்ன நடக்கிறது என்றால், அனைத்து மதங்களையும் மதிக்க தொடங்கியுள்ளோம். முன்பு, சிறுபான்மையினரை ஏமாற்றும் அரசியலில் இறங்கினோம். அது, ஒரு காலக்கட்டத்தில், ஒரு பின்னடைவை உருவாக்கியது என்று நினைக்கிறேன்.
சமரச அரசியல் என்பது இந்திய அரசியல் விவாதத்தில் மிகவும் சக்திவாய்ந்த வார்த்தையாகும். எந்த திசையில் அரசியல் செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்தது. அனைத்து மதங்களையும் மதிக்கிறோம் என்ற பெயரில், உண்மையில், பெரும்பான்மையினரின் மதம் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அதிகமான மக்கள் உணரத் தொடங்கினர். அந்த சமூகத்தின் பெரும் பகுதியினர் இது நியாயமானதாக இல்லை என்று கருதினர்.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் காணப்பட்ட அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கு இந்த நியாயமற்ற உணர்வுக்கு அறிவுசார் மற்றும் அரசியல் மட்டத்தில் ஏற்பட்ட எதிர்வினையே காரணம்" என்றார்.