இனி பயப்பட தேவை இல்ல.. பூகம்பம் குறித்து நொடிப்பொழுதில் அப்டேட்!
இந்தியா மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்டறியப்பட்ட, அறிவிக்கப்பட்ட நிலநடுக்கங்களின் விவரங்கள் தேசிய நில அதிர்வு இணையதளத்தில் கிடைப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தேசிய, மாநில அளவுகளில் பல்வேறு அமைப்புகளுக்கு நில அதிர்வுகள் குறித்த தரவுகள் பகிரப்படுகிறது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பூகம்பம் ஏற்படக்கூடிய பகுதிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், "இந்திய வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவுகளில் ஒன்றாக 1905 ஆம் ஆண்டு நிகழ்ந்த காங்க்ரா நிலநடுக்கம் கருதப்படுகிறது.
"தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம்"
இமாச்சலப் பிரதேசம் உட்பட இமயமலைப் பகுதியில் ஏற்படும் நில அதிர்வுப் பேரிடர்களை நினைவூட்டுகிறது. நிலநடுக்கம், பெரும் பேரழிவை ஏற்படுத்துகிறது. உயிர் இழப்பு உட்பட பல்வேறு தாக்கங்களை உண்டாக்குகிறது. நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள், பேரிடர் மேலாண்மை உத்திகள், பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் முன்னெச்சரிக்கையுடன் கூடிய தயார் நிலை இருக்க வேண்டியது அவசியமாகும்.
நில அதிர்வு வலையமைப்பில் மேலும் 100 நில அதிர்வு ஆய்வகங்கள், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தால் இணைக்கப்படவுள்ளன. இத்தகைய முயற்சிகள் நில அதிர்வு குறித்த கண்காணிப்பு, தொடக்க கால எச்சரிக்கை மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த ஆராய்ச்சி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மத்திய அமைச்சர் என்ன பேசினார்?
தற்போது, புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள நில அதிர்வுக்கான தேசிய மையம் 166 மையங்களுடன் கூடிய தேசிய வலைப்பின்னல் உதவியுடன் நாடு முழுவதும் நில அதிர்வு நடவடிக்கைகளை கண்காணிக்கும் முகமையாக உள்ளது.
நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் வழக்கமான ஆய்வுகள் மற்றும் தரவுகளை பகுப்பாய்வு செய்ய நில அதிர்வு வலையமைப்பு உதவுகிறது. மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தேசிய, மாநில அளவுகளில் பல்வேறு அமைப்புகளுக்கு நில அதிர்வுகள் குறித்த தரவுகள் பகிரப்படுகிறது.
இந்தியா மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்டறியப்பட்ட, அறிவிக்கப்பட்ட நிலநடுக்கங்களின் விவரங்கள் தேசிய நில அதிர்வு இணையதளத்தில் கிடைக்கின்றன" என்றார்.
இதையும் படிக்க: பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி

