இந்தியாவில் விரைவில் வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் திறக்கப்படுமா? - மத்திய அமைச்சர் தெரிவித்தது என்ன?
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் திறப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 1986ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட கல்விக்கொள்கைக்கு மாற்றாக, புதிய கல்விக்கொள்கையை சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய கல்விக்கொள்கை திட்டம், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிக்க முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மசோதாவின் நிலைப்பாட்டை மாற்றியமைக்கிறது.
அதில், வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்களின் எண்ணிக்கையை இந்தியாவில் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய சட்டம் இயற்றப்பட்டு உலகின் சிறந்த 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்படுவதால் கல்விக்கான செலவு அதிகரிக்கும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான ஒழுங்குமுறை, ஆளுகை, மேற்பார்வை உள்ளிட்டவை யாவும், இந்தியாவின் பிற தன்னாட்சி நிறுவனங்களுக்கு இணையாக இருக்கும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா வந்துள்ள பின்லாந்து நாட்டின் கல்வி அமைச்சர் பெட்ரி ஹொன்கோனென், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கல்வித்துறையில் உள்ள பிரச்னைகள், கல்வித்துறையை மேம்படுத்துவது, கொரோனாவுக்கு பிந்தைய கல்வித் துறைக்கான சவால்கள் ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதோடு, குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைக்க உறுதியான அணுகுமுறை தேவை என்று இருதரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.
Pleased to meet the Finnish Minister of Education, Culture and Science, HE @HonkonenPetri. We had fruitful discussions on making knowledge a priority pillar of our bilateral cooperation and deepening engagements in all areas of education, skill development and frontier research. pic.twitter.com/xxBQPqlmyr
— Dharmendra Pradhan (@dpradhanbjp) November 15, 2022
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தர்மேந்திர பிரதான், இந்தியாவுடன் அறிவுசார் துறையில் ஒத்துழைக்க பின்லாந்து ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார். பின்லாந்து பல்கலைக்கழகங்கள் இந்திய உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, ஆரம்ப கால குழந்தைகள் பராமரிப்பு, ஆசிரியர் பயிற்சி, டிஜிட்டல் கல்வி போன்றவற்றில் ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொண்டு பயனடையலாம் என்றும் வலியுறுத்தினார். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு இந்தியாவில் அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் கொள்கை ரீதியான முடிவை அறிவிக்கும் என்றும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.
புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகள் திறக்கப்பட்டால், மேம்பட்ட உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை மாணவர்கள் தவிர்க்க வாய்ப்பு உருவாகும். உள்நாட்டிலும், கல்வியின் தரம் மேலும் அதிகரிக்க கூடும். முன்னதாக இந்திய பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, இணை பட்டங்கள் வழங்கலாம் என சமீபத்தில் பல்கலைக்கழக மனியக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.