OTT Platforms : ’தவறிட்டா அவ்ளோதான்..’ ஓடிடி தளங்களுக்கான புதிய விதிகள்... மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதிரடி!
புகைப்பிடித்தலுக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
OTT Platforms : புகைப்பிடித்தலுக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓடிடி தளம்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்த நேரத்தில் உலக அளவில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. பெரு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவித்தது. தற்போது இதுவும் கட்டாய நடைமுறைகளில் ஒன்றாகிவிட்டது. ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் பெரும் அளவில் உயர்ந்தது. அதேபோன்று, பொழுதுபோக்கு அம்சத்தை பொருத்தவரை ஓடிடி தளங்களின் பயன்பாடு அபரிமித வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஓடிடி தளங்களை ரசிகர்கள் பெருமளவில் விரும்புவதால் அதனின் பயனர்கள் எண்ணிக்கை பெருவிட்டது. குறிப்பாக அமேசான், ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், ஆஹா, ஜீ5 உள்ளிட்ட ஓடிடி தளங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக உள்ளன. குறிப்பிட்ட அளவு சந்தா செலுத்தி இந்த ஓடிடி தளங்களில் தங்களுக்கு பிடித்த படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரீஸ்கள் பார்க்க முடியும்.
மத்திய அரசு அறிவிப்பு
இந்நிலையில், புகைப்பிடித்தலுக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புகை பிடித்தலுக்கு எதிரான வாசகத்தை வெளியிடாத ஓடிடி தளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே திரையரங்குள் மற்றும் தொலைக்காட்சிகள் புகை பிடித்தலுக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இதை ஓடிடி தளத்திலும் வெளியிட கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்துரையாடிய பிறகு, திரையரங்கு போன்று ஓடிடி தளத்திலும் புகைப்பிடித்தலுக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை வெளியிட வேண்டும்.
மீறினால் நடவடிக்கை
மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெட் பிளிக்ஸ், அமேசான் போன்ற மற்ற தளங்களும் இந்த புகைப்பிடித்தலுக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை படத்தின் நடுவிலோ அல்லது தொடக்கத்திலோ 30 நிமிடங்கள் கட்டாயம் வெளியிட வேண்டும்.
அதேபோன்று, படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறும்போதும், எச்சரிக்கை வாசகத்தை வெளியிட வேண்டும். மேலும், 20 நிமிடங்கள் கொண்ட ஆடியோ க்ளிப்பையும் ஓடிடி தளத்தில் வெளியாகும் படத்தில் வெளிட வேண்டும். வெளியிடப்படும் எச்சரிக்கை வாசகமானது 'புகைப்பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் உயிரை கொல்லும்' என்று வெள்ளை நிற ஸ்கீரீனில், கருப்பு நிற எழுத்திலும் தோன்ற வேண்டும்.
அந்தந்த படத்தின் மொழிக்கேற்ப எச்சரிக்கை வாசகத்தை வெளியிட வேண்டும் என்றும் இந்த வாசகத்தில் எந்தவித புகையிலை பிராண்ட் புகைப்படங்களை பயன்படுத்த கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.