கேமராவை ஆன் செய்யுங்க... எல்லாரையும் பார்க்கணும்... இறக்கும் முன் ஆசிரியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
ஆசிரியை மாதவிக்கு இருமல் ஏற்பட்டு பேசுவதில் சிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்களைக் கொடுத்துவிட்டு தனது வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
தான் இறப்பதற்கு முன்பு ஆன்லைன் வகுப்பில் இருந்த தன்னுடைய மாணவர்களிடம் கேமராவை ஆன் செய்யுங்கள், உங்கள் அனைவரையும் பார்க்க வேண்டும்’ என சொல்லி அதன் பிறகு சற்று நேரத்தில் ஆசிரியர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம் ஆடோட்டுகாயா பகுதியைச் சேர்ந்தவர் மாதவி. 47 வயதான இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கொரோனாவின் தாக்கம் காரணமாக மாணவர்களுக்கு இன்னும் நேரடி வகுப்புகள் தொடங்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள்தான் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த வியாழக் கிழமையன்று 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப்பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். பொதுவாக ஆன்லைன் வகுப்புகளில் தேவையில்லாத பட்சத்தில் மைக் மற்றும் கேமராவை ஆஃப் செய்து வைப்பார்கள். அதேபோல அன்றைய தினமும் சில மாணவர்கள் ஆஃப் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் அனைவரிடமும் கேமராவை ஆன் செய்யுமாறும், எல்லாரையும் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அப்போது அடுத்த வாரம் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கும்போது எல்லாரையும் காண ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போதே ஆசிரியை மாதவிக்கு இருமல் ஏற்பட்டு பேசுவதில் சிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்களைக் கொடுத்துவிட்டு தனது வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
மாதவியின் கணவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். இந்நிலையில் அவர் தனியாகத்தான் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. பாதி வகுப்பின்போது தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது தனது உறவினருக்கு அழைத்து உடல்நிலை சரியில்லை என தெரிவித்துள்ளார். உறவினர்கள் வந்து பார்த்தபோது மாதவி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மாதவி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மாதவி டீச்சரின் கடைசி வகுப்பின் ரெகார்ட் செய்யப்பட்ட வீடியோ மாணவர்களிடையே பகிரப்பட்டது. அப்போதுதான், கேமராவை ஆன் செய்யுங்கள், உங்கள் அனைவரையும் பார்க்க வேண்டும்’என அவர் சொன்னது அனைவருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் மாதவி டீச்சர் எப்போதும் எங்களிடம் அன்பாக இருப்பார் என மாணவர்கள் மாதவி டீச்சரின் நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டு அவருக்கு இரங்கல்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாசமான டீச்சரின் நெகிழ்ச்சியான வீடியோ கேரளாவில் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்