"நெய்யில் அதிக கலப்படம்" திருப்பதி லட்டு விவகாரம்.. திருமலை திருப்பதி தேவஸ்தானம் பகீர்!
நெய்யில் அதிக கலப்படம் உள்ளது என்றும் கலப்படம் செய்தவர்களை தடைப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் தரமற்ற நெய் சப்ளை செய்யப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய TTD நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், "நெய்யில் காய்கறி கொழுப்பும் விலங்கு கொழுப்பும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்தது. விலங்கு கொழுப்பாக பன்றிக்கொழுப்பு (பன்றி கொழுப்பு), பாமாயில், மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் திராட்சை விதை, ஆளிவிதை உட்பட மீன் எண்ணெய் ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
"நெய்யில் அதிக கலப்படம்"
சோதனைக்கு உட்பட்ட நெய் மாதிரியில் இதெல்லாம் ஒரு கலவையாக இருந்ததிருக்கிறது. தூய பால் கொழுப்பின் அளவு 95.68 முதல் 104.32 வரை இருக்க வேண்டும். ஆனால், எங்களின் அனைத்து நெய் மாதிரிகளிலும் சுமார் 20 அளவே இருக்கின்றன.
அதாவது வழங்கப்படும் நெய்யில் அதிக கலப்படம் உள்ளது. கலப்படம் செய்தவர்களை தடைப்பட்டியலில் சேர்க்கும் நடைமுறையை நாங்கள் தொடங்கினோம். சப்ளையர் மீது அபராதம் விதிக்கிறோம். நெய் சப்ளைகளை மேம்படுத்தவும், எங்கள் உள் அமைப்பை வலுப்படுத்தவும் நாங்கள் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். எங்கள் சொந்த ஆய்வகத்தை அமைக்க உள்ளோம். இந்த பிரச்சனை எதிர்காலத்தில் தீர்க்கப்படும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக நான் பொறுப்பேற்றதும், வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு பிரசாதமாக வழங்கப்படும் நெய் மற்றும் மிகவும் புனிதமானதாக கருதப்படும் லட்டுவின் தரம் குறித்து முதலமைச்சர் கவலை தெரிவித்தார்.
TTD நிர்வாக அதிகாரி கூறுவது என்ன?
தரத்தில் பாதிப்பு உண்டாக்குவது புனிதமற்ற தன்மையை செய்வது போன்று. தூய்மையான பசும்பால் நெய் கிடைப்பது உள்ளிட்ட இந்த கோயிலின் புனிதத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அதற்கான வேலைகளை ஆரம்பித்தோம். நெய்யில் கலப்படத்தை சோதிக்க எங்களிடம் ஆய்வுக்கூடம் இல்லை என்பது தெரிய வந்தது. வெளியில் உள்ள ஆய்வகங்களிலும் நெய்யின் தரத்தை சரிபார்க்க எந்த சிஸ்டமும் இல்லை.
நெய் செய்ய டெண்டர் எடுத்தவர்கள் குறிப்பிடும் விலை சாத்தியமற்றதாக உள்ளது. சுத்தமான பசு நெய்யை இவ்வளவு குறைந்த விலையில் கொடுக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு குறைவாக இருந்தது. அனைத்து சப்ளையர்களையும் எச்சரித்தோம்.
சப்ளை செய்யப்பட்ட நெய் ஆய்வக சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தடை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அனைத்து மாதிரிகளையும் சேகரித்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறந்த ஆய்வகத்திற்கு அனுப்பினோம். அவை அளித்த அறிக்கைகள் அதிர்ச்சியளிக்கின்றன" என்றார்.