(Source: ECI/ABP News/ABP Majha)
ஜனநாயக கடமை மிக்க மக்கள்...கம்யூனிஸ்டுகளின் கோட்டை... திரிபுரா தேர்தல் வரலாறு.. ஒரு பார்வை...!
25 ஆண்டுகால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றி மூலம் பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது.
வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திரிபுராவில் இன்னும் நான்கே நாள்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திரிபுராவை பொறுத்தவரையில், ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்ட மாநிலம். 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றி மூலம் பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது.
அந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது. அதற்கு முன்பு வரை, திரிபுரா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் இருந்ததில்லை. தற்போது, ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பாஜக பல சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரதான எதிர்க் கட்சிகளாக உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
இந்த கட்சிகளை தவிர்த்து மூன்றாவது முக்கிய கட்சியாக இருப்பது புதிதாக தொடங்கப்பட்ட திப்ரா மோதா கட்சி.
மாநிலத்தின் தேர்தல் வரலாறு:
மாநில அந்தஸ்து பெற்ற பிறகு முதல்முறையாக திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. 1972ஆம் ஆண்டு, ஜனவரி 21ஆம் தேதி முன்பு வரை திரிபுரா யூனியன் பிரதேசமாக இருந்தது. முதல் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றதால் சுகாமோய் சென் குப்தா முதலமைச்சராக பதவியேற்றார்.
திரிபுராவில் இடது முன்னணியில் இடம்பெற்ற இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை (சிபிஐ-எம்) சேர்ந்த மூன்று பேர் முதலமைச்சர்களாக பொறுப்பு வகித்துள்ளனர். நிருபன் சக்ரவர்த்தி (1978-1988), தசரத் டெபர்மா (1993-1998) மற்றும் மாணிக் சர்க்கார் (1998-2018) ஆகியோர் முதலமைச்சர்களாக பொறுப்பு வகித்துள்ளனர்.
திரிபுராவில் மாணிக் சர்க்கார் முதலமைச்சராக இருந்த மொத்த நாட்கள் 7,303. கடந்த 1998ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி முதல் 2018ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி வரை சர்க்கார் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்.
1977 சட்டப்பேரவை தேர்தலில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற மொத்த இடங்களின் எண்ணிக்கை 51. மாநிலத்தில் இதுவரை வேறு எந்த கட்சியும் இந்தளவுக்கு பெரிய வெற்றியை பதிவு செய்ததில்லை.
கம்யூனிஸ்டுகளின் கோட்டை
2013 சட்டப்பேரவை தேர்தலில் மாணிக் சர்க்கார் தலைமையிலான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாங்கிய வாக்கு சதவீதம் 48.11. கடந்த 1972ஆம் ஆண்டு, திரிபுராவுக்கு மாநில அந்தஸ்து வழங்கிய பிறகு வெற்றி பெற்ற கட்சி பெற்ற அதிகபட்ச வாக்கு சதவீதம் இதுவாகும்.
திரிபுராவின் முதலமைச்சராக ராதிகா ரஞ்சன் குப்தா பொறுப்பு வகித்த நாட்கள் 101. 1977இல் ஜனதா கட்சியுடனான கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலகிய பிறகு மிகக் குறுகிய கால முதலமைச்சராக பதவி வகித்தவர்.
வாக்கு சதவீதம் அதிகரிப்பு
பிப்ரவரி 16ஆம் தேதி வாக்களிக்கத் தகுதி பெற்ற மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 13 ஆயிரத்து 478 பேர். 2018ஆம் ஆண்டிலிருந்து ஒன்பது சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 65,044 முதல் முறை வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 34,704 ஆண்கள் மற்றும் 30,328 பெண்கள்.
2013இல் பதிவான வாக்குகளின் சதவீதம் 93. எந்தவொரு சட்டமன்றத் தேர்தலிலும் இந்தளவுக்கு வாக்குகள் பதிவானதில்லை. உண்மையில், திரிபுராவில் 2008ஆம் ஆண்டு 91.22 சதவீத வாக்குகள் பதிவாகி அதன் முந்தைய சாதனையை முறியடித்தது.