(Source: Poll of Polls)
Top 10 News: அதானி பங்குகள் வீழ்ச்சி, மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசு சலுகை - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
பழனி கோயிலில் திருமாவளவன் சுவாமி தரிசனம்
பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் வணங்கினார். புலிப்பாணி ஆசிரமத்தில் பழனி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள், திருமாவளவனை வரவேற்று பிரசாதங்கள் வழங்கினார்.
மீண்டும் எகிறிய தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, 57 ஆயிரத்து 160 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் விலை 7 ஆயிரத்து 145 ரூபாயை எட்டியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் உயர்ந்துள்ளது.
மருத்துவ மாணவர்களுக்கு புதிய சலுகை
மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கை மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தம்பதி சிறையிலடைப்பு
ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தன், சத்யாவதி தம்பதி சிறையில் அடைப்பு. ஆனந்தன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியையும் கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீசார்.
அதானி பங்குகள் விலை கடும் சரிவு
அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அம்பானி மீது, நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளன. அதானி எண்டர்பிரைசஸ், போர்ட் மற்றும் பவர் போன்ற நிறுவனங்களின் பங்குகள் 10%-க்கும் மேல் சரிந்துள்ளன.
இந்தியா - சீனா பேச்சுவார்த்தை
வியட்நாம் நாட்டின் தலைநகர் லவோஸ் நகரில் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாடு நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் டாங் ஜன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு தரப்பும் இடையேயான எல்லைப்பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திணறும் டெல்லி
டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அபாய கட்டத்தை தாண்டியுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்களில் பணியாற்றும் அரசு, தனியார் ஊழியர்களில் 50% பேர் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ஜார்கண்டில் யார் ஆட்சி?
ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, பல்வேறு தரப்பில் இருந்தும் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் பெரும்பாலானவற்றில் பாஜக தலைமையிலான கூட்டணியே இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 36 பேர் பலி
சிரியாவின் பல்ரிம்யா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை குறி வைத்து நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்வோம் - கம்மின்ஸ்
சொந்த மண்ணில் விளையாடும்போது எப்போதுமே அழுத்தங்கள் இருக்கும். மிகச்சிறந்த திறமைகளை கொண்டுள்ள இந்திய அணி நல்ல போட்டியை அளிக்கும். பார்டர்-கவாஸ்கர் தொடரை வெல்ல இது சிறப்பான தருணம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.