Lalu Prasad Kidney Transplant: சிங்கப்பூரில் சிகிச்சை.. லாலு பிரசாத் யாதவ் விரைந்து குணம்பெற முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
லாலு பிரசாத் யாதவ் விரைந்து குணமடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு இன்று சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அவர் விரைந்து குணமடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவரும் பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் பல நாள்களாகவே உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார்.
முன்னதாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், 74 வயது லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக முன்னதாக சிங்கப்பூர் சென்றார். இன்று அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் நிலையில் சிங்கப்பூரில் வசித்து வரும் லாலுவின் மகள் அவருக்கு சிறுநீரகம் அளிக்க உள்ளார்.
இந்நிலையில், லாலு பிரசாத் விரைந்து குணமடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், ”முதுபெரும் சமூக நீதிப் போராளியும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு இன்று மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமையவும், விரைந்து குணமடையவும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
Wishing the veteran social justice warrior and @RJDforIndia President Thiru. @laluprasadrjd who undergoes Kidney transplant in Singapore today a successful surgery and speedy recovery.@yadavtejashwi
— M.K.Stalin (@mkstalin) December 5, 2022
முன்னாள் ரயில்வே துறை அமைச்சரான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன வழக்கில் சிக்கி சிறை சென்ற நிலையில், சிகிச்சைக்காக டெல்லி, ராஞ்சி மருத்துவமனைகளில் பலமுறை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து பிணையில் லாலு பிரசாத் யாதவ் வெளிவந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கான அவரது மனுவை டெல்லி நீதிமன்றம் அனுமதித்தது. சிறப்பு நீதிபதி (சிபிஐ) கீதாஞ்சலி கோயல் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 25 வரை, வெளிநாடு செல்ல லாலுவுக்கு அனுமதி வழங்கினார். முன்னதாக தனது பாஸ்போர்ட்டை விடுவிக்கக் கோரிய லாலு பிரசாத் யாதவின் மனுவை ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 16ஆம் தேதி ஏற்றுக்கொண்டது.
மேலும் படிக்க: Mummy Golden Tongue : 2000 ஆண்டுகள் பழமையான மம்மியின் தங்க நாக்குகள்.. தொல் பொருள் ஆய்வாளர்கள் தந்த சுவாரஸ்ய தகவல்..