(Source: ECI/ABP News/ABP Majha)
என்சிபி தலைவர் பதவியில் இருந்து விலகும் சரத் பவார்.. முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கை..தேசிய அரசியலில் ட்வீஸ்ட்..!
நாடு முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் கைவிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக சரத் பவார் அறிவித்திருந்த நிலையில், அந்த முடிவை கைவிட வேண்டும் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் கைவிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பதவி விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாணக்கியர் சரத் பவார்:
இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் சரத் பவாரும் முக்கியமானவர். இவர்1958ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அரசியலில் உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் எதிர்கொண்டவர்.
காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிரிவுகளின்போது சரத் பவார் என்கிற பெயரும் அடிபட்டுக்கொண்டே இருந்தது. இவர் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக 4 முறை பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மத்திய பாதுகாப்புத் துறை, வேளாண்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
இத்தாலியில் பிறந்த காரணத்தால் சோனியா காந்தியை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களில் சரத் பவாரும் ஒருவர். இதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டதை தொடர்ந்து, மற்ற தலைவர்களுடன் இணைந்து 1999 ஆம் ஆண்டு மே மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர்களில் நீண்ட காலம் தனிக்கட்சியை தக்க வைத்துக் கொண்டவர்களில் சரத் பவார் குறிப்பிடத்தக்கவர். இருப்பினும், தேசிய அரசியலின் சூழல் காரணமாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து, காங்கிரஸ் கட்சிக்கு நட்பு சக்தியாகவும் இருந்து வருகிறார்.
தேசிய அரசியல்:
கடந்த 2019ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றிபெற்றது. ஆனால், முதலமைச்சர் பதவி பிரச்னை காரணமாக அக்கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. கொள்கை ரீதியாக எதிர்கட்சியான சிவசேனாவை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இணைத்து ஆட்சி அமைக்க முக்கிய பங்கு வகித்தவர் சரத் பவார்.
ஆனால், பின்னர், சிவசேனா கட்சியே இரண்டாக உடைந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தற்போது ஆட்சி நடத்தி வருகிறது. இந்த சூழலில், பாஜக கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், சரத் பவாரின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த அணியை உருவாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சரத் பவாரின் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.