DMK MPs: ஒருங்கிணைப்பு குழுவில் டி.ஆர். பாலு.. ஊடக குழுவில் கனிமொழி.. I.N.D.I.A கூட்டணியில் அசத்தும் திமுக
I.N.D.I.A கூட்டணியில் திமுக எம்பிக்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக, இந்தாண்டின் இறுதியில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
அடித்து ஆடும் I.N.D.I.A கூட்டணி:
இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில், பாஜகவை வீழ்த்தும் எண்ணத்துடன் ஒரே அணியில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து I.N.D.I.A என்ற பெயரில் மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியின் மூன்றாவது கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.
இதில், மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுமட்டும் இன்றி, பல்வேறு முக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், திமுக எம்பிக்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரச்சாரம் தொடங்கி ஊடகம், சமூக ஊடகம், ஆராய்ச்சி என நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
I.N.D.I.A கூட்டணியில் அசத்தும் திமுக எம்பிக்கள்:
அதன்படி, திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா பிரச்சாரக் கமிட்டியிலும், கனிமொழி ஊடகக் குழுவிலும், தயாநிதி மாறன் சமூக ஊடகக் குழுவிலும், ஏ. ராஜா ஆய்வுக் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்கள். இவர்களை தவிர, மற்ற 26 கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஆய்வுக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் அமிதாப் துபே, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும் பேராசிரியருமான சுபோத் மேத்தா, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் பிரியங்கா சதுர்வேதி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வந்தனா சவான், ஐக்கிய ஜனதா கட்சியின் கே.சி.தியாகி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சுதிவ்ய குமார் சோனு, ஆம் ஆத்மி கட்சியின் ஜாஸ்மின் ஷா, சமாஜ்வாதி கட்சியின் அலோக் ரஞ்சன், தேசிய மாநாட்டு கட்சியின் இம்ரான் நபி தர், மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதித்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஊடக ஒருங்கிணைப்பு குழுவில் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மனோஜ் ஜா, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் அரவிந்த் சாவந்த், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜிதேந்திர ஆவாத், ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சட்டா, ஐக்கிய ஜனதா தள கட்சியின் ராஜீவ் நிகம் மற்றும் ராஜீவ் ரஞ்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரஞ்சால், சமாஜ்வாதி கட்சியின் ஆஷிஷ் யாதவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சுப்ரியோ பட்டாச்சார்யா மற்றும் அலோக் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டாக்டர். பால்சந்திரன் காங்கோ, தேசிய மாநாட்டு கட்சியின் தன்வீர் சாதிக், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நரேன் சாட்டர்ஜி, சிபிஐ(எம்எல்) கட்சியின் சுசேதா. டி, மக்கள் ஜனநாயக கட்சியின் மோஹித் பான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.