”தொற்று நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்.. தடை நடவடிக்கைகளுக்கு அவசியமிருக்காது” - ஆளுநர் தமிழிசை
மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால் விழாக்களுக்கு அரசு தடைவிதிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவதற்காக சுகாதாரத்துறை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி காந்தி வீதியில் வீடுகள், கடைகள் தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் முகாமினை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார்.
அதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான ஆவணம் எப்போது வேண்டுமானாலும் கேட்கப்படலாம் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதன்படி சுகாதாரத்துறையினரின் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் உலகம் முழுவதும் பல நாடுகளில் லட்சக்கணக்கான பேரை பாதித்துக் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள். நாம் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதிப்பை தவிர்த்துவிடலாம்.
புதுச்சேரியில் முதல் தவணை தடுப்பூசி 8,14,000 பேர் செலுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது தடுப்பூசி 5,30,448 பேர் செலுத்துகிறார்கள். மொத்தம், 13,45,193 தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு காலக்கெடு விதிக்கவில்லை. ஒமைக்ரான் காலக்கெடு வைத்துவருகிறது. வெளிநாடுகளில் வேகமாக பரவத் தொடங்கிவிட்டது.
கொரோனா விதிகளை பின்பற்றி புத்தாண்டு கொண்டாட்டங்கள், திருவிழாக்களை அனுமதிக்கலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது. வெளி ஊர்களிலிருந்து வருபவர்களுக்கும் சான்றிதழ் கேட்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால் அரசு தடைவிதிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. அது மக்கள் கையில்தான் உள்ளது என்று குறிப்பிட்டார். பின்னர் அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களுக்கு தடுப்பூசி போடச்செய்தார்.
புதுச்சேரியில் இன்று புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி :
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 345 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 33 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 99 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 132 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 19 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 335 (98.45 சதவீதம்) ஆக உள்ளது.
மேலும் படிக்க : Today Headlines : பொங்கல் பஸ்...இன்றும் ஆதார் இணைப்பு... ஆஸி., வெற்றி... இன்னும் பல செய்திகள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்